போட்டித்தேர்வு பயிற்சி மைய நூலகத்திற்கு புத்தகங்கள், கணினி வழங்கிய அமைச்சர் @ ஒட்டன்சத்திரம்


ஒட்டன்சத்திரம் அருகே காளாஞ்சிபட்டியில் உள்ள ஒருங்கிணைந்த போட்டி தேர்வு பயிற்சி மையத்தில் மாணவர்களுக்கான கையேடுகளை வழங்கிய அமைச்சர் அர.சக்கரபாணி.

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அருகே கலைஞர் நூற்றாண்டு ஒருங்கிணைந்த போட்டித்தேர்வு பயிற்சி மைய நூலகத்திற்கு தேவையான புத்தகங்கள், கணினி மற்றும் மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி கையேடுகளை அமைச்சர் அர.சக்கரபாணி வழங்கினார்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே காளாஞ்சிபட்டியில், கலைஞர் நூற்றாண்டு ஒருங்கிணைந்த போட்டித்தேர்வு மையம் செயல்பட்டு வருகிறது. பயிற்சி மையத்திற்கு ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் நூலகத்திற்கு புத்தகங்கள், கணினி மற்றும் மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி கையேடுகளை அமைச்சர் அர.சக்கரபாணி வழங்கினார்

நிகழ்ச்சியில் அமைச்சர் பேசுகையில், "தமிழக இளைஞர்களின் அரசுப் பணி என்ற உயரிய லட்சியக் கனவினை நினைவாக்கிடும் வகையிலும், ஒன்றிய மற்றும் மாநில அரசுப் பணிக்கான தேர்வுகளில் இளைஞர்கள் தன்னம்பிக்கையுடனும், முழு தகுதியுடனும் அதிகமானோர் பங்கேற்றிட வழிகாட்டிட வேண்டும் என்ற உயரிய எண்ணத்தில் கலைஞர் நூற்றாண்டு ஒருங்கிணைந்த போட்டித்தேர்வு பயிற்சி மையம் அமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த பயிற்சி மையத்தில் தற்போது 175 மாணவ, மாணவிகள் பயிற்சி பெற்று வருகின்றனர். மாணவ, மாணவிகளுக்கு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம், ஆசிரியர் பயிற்சி தேர்வாணையம், தமிழ்நாடு அரசு சீருடைப்பணியாளர் தேர்வாணையம், ரயில்வே துறை, வங்கி துறை உட்பட அரசுப் பணிகளுக்கான அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் சிறந்த வல்லுநர்களைக் கொண்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. புதன்கிழமை மற்றும் சனிக்கிழமை என வாரத்தில் 2 நாட்கள் மாதிரித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

இங்குள்ள மாணவ, மாணவிகள் பயிற்சி பெறுவதற்கு வசதியாக கணிதம் தொகுதி-1 மற்றும் கணிதம் தொகுதி-2, பொதுத்தமிழ் தொகுதி-1 மற்றும் பொதுத்தமிழ் தொகுதி-2 என 175 மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.1,700 மதிப்பீட்டிலான பயிற்சி கையேடுகள், நூலகத்திற்கு புத்தகங்கள் மற்றும் கணினி என மொத்தம் ரூ.10 இலட்சம் மதிப்பீட்டிலான புத்தகங்கள் மற்றும் கணினி ஆகியவை இலவசமாக வழங்கப்பட்டுள்ளது" என்றார்.

நிகழ்ச்சியில், ஒட்டன்சத்திரத்திலிருந்து வடகாடு செல்லும் வழியில் மான் குறுக்கிட்டதில் இருசக்கரம் விபத்துக்குள்ளானதில் அதில் சென்ற மகுடீஸ்வரன் என்பவர் இறந்ததையடுத்து, அவருடைய குடும்பத்திற்கு மனித வன உயிரின மோதல் நிவாரண நிதியிலிருந்து ரூ.10 லட்சத்திற்கான காசோலையை அவருடைய தாய் கோமதியிடம் அமைச்சர் அர.சக்கரபாணி வழங்கினார்.

நிகழ்ச்சியில், ஒட்டன்சத்திரம் ஒன்றியக்குழுத் தலைவர் மு.அய்யம்மாள், வாடிப்பட்டி ஊராட்சி தலைவர் ஜோதீஸ்வரன், காளாஞ்சிப்பட்டி ஊராட்சி தலைவர் செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

x