குற்றாலத்தில் சுற்றுலா வசதிகளை மேம்படுத்த வேண்டும்: மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்


தென்காசி: தென்காசி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமான‌ குற்றாலத்தை நவீனப்படுத்தி அதனை உலகத்தரம் வாய்ந்த சுற்றுலா தலமாக மேம்படுத்த வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட பொதுக்குழு கூட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. மாவட்டத் தலைவர் முகம்மது யாகூப் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் சலீம் வரவேற்று பேசினார். மாவட்ட பொருளாளர் முகம்மது பாசித் வரவு, செலவு கணக்கு தாக்கல் செய்தார். தமுமுக மாவட்ட செயலாளர் அப்துல் ரஹ்மான் செயல் அறிக்கையே வாசித்தார்.மமக துணை பொதுச்செயலாளர் யாகூப், தமுமுக துணை பொதுச்செயலாளர் மைதீன் சேட் கான் ஆகியோர் சிறப்புரையாற்றினர். நிர்வாகிகள் நயினார் முகம்மது, இஸ்மத் மீரான், செய்யது அலி, பீர் மைதீன், பஷீர் ஒலி, முகமது அலி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். செங்கோட்டை நகர தலைவர் முகம்மது ஆரீப் நன்றி கூறினார்.

கூட்டத்தில், “தென்காசி மாவட்டத்துக்கு தேவையான அனைத்து அரசு கட்டமைப்புகளை உடனடியாக ஏற்படுத்த வேண்டும். தென்காசி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமான‌ குற்றாலத்தை நவீனப்படுத்தி, பாதுகாப்புகளை மேம்படுத்தி, உலகத்தரம் வாய்ந்த சுற்றுலா தலமாக மேம்படுத்த வேண்டும். புளியங்குடி அரசு மருத்துவமனையில் மருத்துவ வசதிகளை மேம்படுத்த வேண்டும். மாதம் ஒரு முறை மின் கட்டணத்தை கணக்கிட்டு வசூல் செய்ய வேண்டும்.

சிலம்பு எக்ஸ்பிரஸ், வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ், நெல்லை - தாம்பரம் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்களை தினசரி ரயிலாக இயக்க வேண்டும். செங்கோட்டையில் இருந்து மும்பைக்கு வாராந்திர ரயில் இயக்க வேண்டும். தென்காசி மாவட்டத்தில் இருந்து வெளி மாநிலத்துக்கு கனிமவளங்கள் கொண்டுசெல்வதை ஒழுங்குபடுத்த வேண்டும். தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக புதிய கட்டிடத்தை விரைவில் திறந்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.

பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் ராணுவ தாக்குதலை நிறுத்த ஐநா தலையிட வேண்டும். கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவித்து துரிதமாக செயல்பட்டு நிவாரண உதவிகளை செய்ய வேண்டும். கடையத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் வட்டம் உருவாக்க வேண்டும்” என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

x