வாரிசு அடிப்படையில் சேர்ந்த போக்குவரத்து ஊழியர்களுக்கு ஒப்பந்தப்படி ஊதியம் வழங்குக - சிஐடியு


கோப்புப் படம்

சென்னை: மாநகர போக்குவரத்துக் கழகத்தில் வாரிசு அடிப்படையில் சேர்ந்த தினக்கூலி தொழிலாளர்களுக்கு 14-வது ஊதிய ஒப்பந்தப்படி ஊதியம் வழங்க வேண்டும் என சிஐடியு வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக மேலாண் இயக்குநருக்கு அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்க (சிஐடியு) பொதுச்செயலாளர் வி.தயானந்தம் அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: மாநகர போக்குவரத்துக் கழகத்தில் பணியின்போது இறந்தவர்களின் வாரிசுகள் 100-க்கும் மேற்ப்ட்டோர் தினக்கூலி அடிப்படையில் பணி செய்து வருகின்றனர்.

அவர்களில் ஓட்டுநருக்கு ரூ.436, நடத்துநர்களுக்கு ரூ.429 தினக் கூலியாக வழங்கப்படுகிறது. ஆனால், தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட்டவர்களுக்கோ ரூ.800, 790 என தினக்கூலி வழங்கப்படுகிறது. தினக்கூலி தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்குவது தொடர்பாக 14-வது ஊதிய ஒப்பந்தத்தில் முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஓட்டுநருக்கு ரூ.1,021, நடத்துநருக்கு ரூ.1,001 வழங்கப்பட வேண்டும். ஆறு மாதத்துக்கு ஒரு முறை அகவிலைப்படி உயரும் போது ஊதியமும் உயர்த்தி வழங்கப்பட வேண்டும். இந்த ஊதியத்தை ஓட்டுநர், நடத்துநர்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

x