தென்காசி: அடவிநயினார் அணை அருகே உள்ள விவசாய தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளன.
மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் விவசாய நிலங்களில் காட்டு யானை, கரடி, காட்டுப்பன்றிகள் அடிக்கடி சேதப்படுத்தி வருகின்றன. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சமீபத்தில் சொக்கம்பட்டி அருகே காவலாளி ஒருவர் காட்டு யானை தாக்கி உயிரிழந்தார். இதனால் மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் உள்ள விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.
வன விலங்குகள் விவசாய நிலங்களில் புகுந்துவிடுவதை தடுக்கக் கோரி போராட்டம் நடத்திய விவசாயிகள், ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டங்களிலும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், அடவிநயினார் அணை அருகே உள்ள விவசாய தோட்டம் அருகே சிறுத்தை நடமாட்டம் இருந்ததை பார்த்த விவசாயிகள் மேலும் அச்சமடைந்துள்ளனர்.
அடவிநயினார் அணை அருகே மேட்டுக்கால் சாலையில் அப்துல் காதர் என்பவரது தோட்டத்தில் சிறுத்தை நடமாடியதை பார்த்த இளைஞர்கள், செல்போனில் வீடியோ பதிவு செய்துள்ளனர். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்து, அதனைக் கூண்டு வைத்து பிடித்து வனப்பகுதியில் விடுவிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், கடையநல்லூர் வனச்சரக அலுவலர் சுரேஷ் தலைமையில் மேக்கரை பிரிவு வனவர் முருகேசன், வனக்காப்பாளர்கள் ஜோஸ்வா, செல்லத்துரை, சுகந்தி மற்றும் வனத்துறையினர் சிறுத்தை நடமாட்டம் குறித்து இன்று (ஞாயிறு) கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேக்கரை மற்றும் வடகரை பகுதியில் வன உயிரின நடமாட்டம் உள்ளதால் கவனமாக செல்லும் படி விழிப்புணர்வு போர்டு வைக்கப்பட்டது.