தொடரும் நீர்வரத்து - வைகை அணையின் நீர்மட்டம் அதிகரிப்பு


மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழையால் மூலவைகையில் அதிகரித்துள்ள நீர்வரத்து. (இடம்: அய்யனார்புரம்)

ஆண்டிபட்டி: முல்லை பெரியாறு மற்றும் மூல வைகையில் இருந்து நீர்வரத்து அதிகரித்துள்ளதால் வைகை அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

தேனி மாவட்டம் வருசநாடு மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த மாத தொடக்கத்தில் மழைப் பொழிவு இல்லை. இதனால் சிற்றாறுகள் வறண்டு மூல வைகையில் நீர்வரத்து குறைந்தது. இந்நிலையில் கடந்த சில வாரங்களாக அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. இதனால் மூலவைகையில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேலும் முல்லை பெரியாறு அணையில் இருந்தும் நீர் அதிகளவில் திறக்கப்பட்டுள்ளதால் வைகை அணைக்கான நீர்வரத்து உயர்ந்துள்ளது. இதனால் கடந்த 26-ம் தேதி 54.35 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று 56.36 அடியாக (மொத்த உயரம் 71) உயர்ந்துள்ளது.

தற்போது நீர்வரத்து விநாடிக்கு 1,347 கனஅடியாக உள்ளது. நீர் வெளியேற்றத்தைப் பொருத்தவரை பாசனத்துக்காக 900 கனஅடி, குடிநீர் திட்டங்களுக்காக 69 கனஅடி என மொத்தம் 969 கனஅடி நீர் சென்று கொண்டிருக்கிறது. தற்போது மூலவைகை மற்றும் முல்லை பெரியாற்றில் இருந்தும் நீர்வரத்து அதிகம் உள்ளதால் அணையின் நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது. முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 131.80 அடி யாக உள்ளது. நீர்வரத்து விநாடிக்கு 1,813 கனஅடியாகவும், 1,400 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டும் வருகிறது.

x