காஞ்சி மாநகராட்சி ஆணையர் திடீர் இடமாற்றம்


காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையராக இருந்த செந்தில் முருகன் சென்னை மாநகராட்சியின் உட்கோட்ட அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை மாநகராட்சியின் உட்கோட்ட அதிகாரியாக இருந்த வி.நவீந்திரன் காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். மாநகராட்சி மேயர் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு முடிந்த சில நாட்களுக்குள் தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2022-ம் ஆண்டு காஞ்சிபுரம் மாநகராட்சி மேயராக மகாலட்சுமி பதவியேற்றதில் இருந்தே அவருக்கும், மாநகராட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் மோதல் இருந்து வந்தது. சிறு, சிறு பிரச்சினைகளுடனே அவர் பணியாற்றி வந்தார். கடந்த சில மாதங்களாக மாநகராட்சி உறுப்பினர்களுக்கும், அவருக்கும் இடையிலான மோதல் அதிகரித்தது. இந்த மோதலில் மாநகராட்சி ஆணையராக இருக்கும் செந்தில்முருகன் மேயர் மகாலட்சுமிக்கு ஆதரவாக இருப்பதாக உறுப்பினர்கள் குற்றம்சாட்டி வந்தனர்.

இந்நிலையில் கடந்த ஜூன் 7-ம் தேதி திமுக, அதிமுக, பாமக,காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகளைச் சேர்ந்த மாநகராட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட 33 பேர் சேர்ந்து மேயர் மகாலட்சுமி மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர ஆணையர் செந்தில்முருகனிடம் மனு அளித்தனர். அந்த மனு சரிவரஇல்லை என்றுகூறி ஆணையர் செந்தில் முருகன் திருப்பி அனுப்பினார். இந்நிலையில் மீண்டும் திருத்தப்பட்ட மனுவை மாநகராட்சி உறுப்பினர்கள் அளித்த பிறகே நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு ஜூலை 29-ம் தேதி நடைபெறும் என்று அறிவித்தார்.

இதற்கிடையில் மாநகராட்சி உறுப்பினர்கள் செந்தில் முருகன் மேயருக்கு ஆதரவாக செயல்படுவதால் அவர் தலைமையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெறக் கூடாது என்று மாநகராட்சி அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தாங்கள் பங்கேற்று தீர்மானத்தில் கையெழுத்திடாத கூட்டங்களில் தாங்கள் பங்கேற்காததுபோல் ஆவணங்கள் மாற்றம் செய்யப்படுவதாகவும் குற்றம்சாட்டினர்.

ஆனாலும் அப்போது ஆணையர் செந்தில் முருகன் மீது அரசு சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதன் பின்னர் ஜூலை 29-ம் தேதி நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெற்றது. அதில் மாநகராட்சி உறுப்பினர்கள் யாரும் பங்கேற்கவில்லை. இந்நிலையில் மேயர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்ததாக ஆணையர் செந்தில்முருகன் அறிவித்தார். இதனால் ஆணையர் செந்தில் முருகன் மீது எதிர்க்கட்சிகள் மற்றும் திமுகவினர் ஒரு பிரிவினர் இவர் மேயருக்கு ஆதரவாக இருப்பதாக அதிருப்தியில் இருந்தனர்.

இந்தச் சூழ்நிலையில் ஆணையர் செந்தில் முருகன் வழக்கமாக பல்வேறு அதிகாரிகளுடன் நிர்வாக ரீதியில் இடமாற்றம் செய்வது போல் சென்னை மாநகராட்சியில் கோட்ட அலுவலராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அந்த இடத்தில் இருந்த நவீந்திரன் காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

x