சென்னை: சென்னையில் திருமணத்துக்கு மறுத்த ஆண் நண்பரின் மூன்றரை வயது மகனை கொலை செய்து பிரேதத்தை சூட்கேஸில் அடைத்து நாகப்பட்டினம் செல்லும் பேருந்தில் விட்டுச் சென்ற வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக சிறையில் உள்ள பூவரசியை முன்கூட்டியே விடுதலை செய்ய தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் அதிகாரியாக பணிபுரிந்த நபருக்கு திருமணமாகி மனைவியும், இரு குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் அந்த அதிகாரிக்கும், அவருடன் அதே அலுவலகத்தில் பணிபுரிந்த பூவரசி என்ற பெண்ணுக்கும் கூடா நட்பு இருந்தது. ஒரு கட்டத்தில் அந்த அதிகாரி, பூவரசியை விட்டு விலகியுள்ளார்.
இதில் ஆத்திரமடைந்த பூவரசி கடந்த 2010-ம் ஆண்டு ஜூலை மாதம் 17-ம் தேதி தனது ஆண் நண்பரான அந்த அதிகாரியின் மூன்றரை வயது மகனை அழைத்துச் சென்று, கழுத்தை நெரித்து கொலை செய்து உடலை சூட்கேஸில் அடைத்து, நாகப்பட்டினம் செல்லும் பேருந்தில் விட்டுவிட்டு சென்னை திரும்பினார். அந்த சிறுவனின் உடல் நாகப்பட்டினம் பேருந்து நிலையத்தில் கண்டெடுக்கப்பட்ட சூட்கேஸில் இருந்து மீட்கப்பட்டது. இந்த கொலை வழக்கில் கைதான பூவரசிக்கு சென்னை அமர்வு நீதிமன்றம் கடந்த 2011-ம் ஆண்டு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
10 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறைவு செய்த ஆயுள் தண்டனை கைதிகளை அண்ணா பிறந்த தினத்தை முன்னிட்டு முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பான தமிழக அரசின் 2021-ம் ஆண்டு அரசாணைப்படி தற்போது தனது உறவினர் பூவரசியை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் எனக்கோரி மணிகண்டன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் எஸ்.மனோகரனும், அரசு தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஏ. கோகுலகிருஷ்ணனும் ஆஜராகி வாதிட்டனர்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், நன்னடத்தை அதிகாரியின் அறிக்கைப்படி ஆயுள் தண்டனை கைதியாக சிறையில் உள்ள பூவரசியை முன்கூட்டியே விடுதலை செய்ய உத்தரவிடுகிறோம். 14 ஆண்டுகள் சிறை தண்டனையை அனுபவித்துள்ள பூவரசி, செய்த தவறுக்காக வருந்தியிருப்பார் என நம்புகிறோம். இந்த சமுதாயத்தில் மீண்டும் அமைதியான வாழ்க்கையைத் தொடர வேண்டும் என்ற அடிப்படையில் அவரை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.