தமிழகத்தில் யார் உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: அண்ணாமலை குற்றச்சாட்டு


சென்னை: தமிழகத்தில் யார் உயிருக்கும் உத்தரவாதமில்லாத நிலை நீடிக்கிறது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ்தளத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது:

கோவையில் வழக்கறிஞர் உதயகுமார் என்பவர், ஆக.2-ம் தேதி வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. தமிழகத்தில், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, கொலைகள் சர்வசாதாரணமாகி இருக்கின்றன. சட்டம்-ஒழுங்கு தனது நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் என்று உறுதியளித்த முதல்வர் ஸ்டாலின், இதுகுறித்து எந்த நடவடிக்கைகளும் எடுத்ததாகத் தெரியவில்லை. மாறாக, அமைச்சர்கள், கொலைகள் நடக்கத்தான் செய்யும் என்ற ரீதியில் பேசுவது முற்றிலும் ஏற்கத்தக்கதல்ல.

ஒரு தேசியக் கட்சியின் மாநிலத் தலைவர் தொடங்கி, திமுக கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர், வழக்கறிஞர்கள், பொதுமக்கள் என யார் உயிருக்கும் உத்தரவாதமில்லாத நிலை, தமிழகத்தில் நீடிப்பது அச்சத்துக்குரியது. சமூக வலைத்தளங்களில், திமுக அரசின் தவறுகளை விமர்சிப்பவர்களை கைது செய்வதற்காக மட்டுமே காவல்துறையினர் பயன்படுத்தப்படுகின்றனரே தவிர, காவல்துறையின் முக்கியக் கடமையான சட்டம் ஒழுங்கு, முற்றிலும் சீர்குலைந்து கிடப்பது, அரசியல் கடந்து மிகவும் வருந்தத்தக்கது.

காவல் துறைக்குப் பொறுப்பான முதல்வர் ஸ்டாலின், சட்டம் ஒழுங்கைக் காக்க இனியும் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளவில்லை என்றால், தமிழக அரசியல் வரலாற்றில் கையாலாகாத முதல்வர் என்றே அறியப்படுவார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

x