வாலாஜா அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தை உயிரிழப்பு: மருத்துவர்கள் அலட்சியம் என புகார்


ராணிப்பேட்டை: வாலாஜா அரசு மருத்துவமனையில் பிறந்த சில நாட்களே ஆன நிலையில் ஆண் குழந்தை இன்று (ஆக.3) உயிரிழந்தது. குழந்தையை முறையாக பராமரிக்காமல் விட்டதே உயிரிழப்புக்கு காரணம் என குற்றம்சாட்டி மருத்துவர்களிடம், உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டையைச் சேர்ந்தவர் சிவா. தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி லட்சுமி. சிவா தனது மனைவி லட்சுமியின் பிரசவத்துக்காக அவரை, கடந்த ஜூலை 30-ம் தேதி வாலாஜா அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். அன்றைய தினம் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. கடந்த ஆகஸ்ட் 2-ம் தேதி இரவு லட்சுமி வழக்கம்போல் தனது குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்து, குழந்தையை தூங்க வைத்தார். 3-ம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு குழந்தை அசைவின்றி இருப்பதாக லட்சுமி மற்றும் அவருடன் இருந்த உறவினர், பணியில் இருந்த செவிலியர்களிடம் தெரிவித்தனர்.

செவிலியர்கள் இதுகுறித்து மருத்துவருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து மருத்துவர் அங்கு வந்து குழந்தையை பரிசோதனை செய்தார். குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர் உறவினர்களிடம் தெரிவித்தார். இதனை கேட்ட குழந்தையின் தாய் லட்சுமி மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். “குழந்தையை தொடர்ந்து கண்காணித்து முறையாக பராமரிக்கவில்லை. இதுவே குழந்தையின் உயிரிழப்பு காரணம்” என கூறி மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை பணியாளர்களிடம் குழந்தையின் உறவினர்கள் சிறிது நேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பிறந்த சில நாட்களே ஆன பச்சிளம் குழந்தை உயிரிழந்த சம்பவம் மருத்துவமனை வளாகத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் கேட்டபோது, “குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்து விட்டு, முதுகில் தட்டி குழந்தையை சரியாக தூங்க வைக்கவில்லை. இதன் காரணமாக குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்து இருப்பது தெரியவந்தது" என்று தெரிவித்தனர்.

x