தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீடு: அவகாசம் நீட்டிக்க பாஜக வலியுறுத்தல்


சென்னை: தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களுக்கு விண்ணப்பிக்க காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என தமிழக பாஜக வலியுறுத்தி உள்ளது.

இதுகுறித்து தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, சிறுபான்மையினர் நடத்தும் பள்ளிகள் தவிர மற்ற தனியார் பள்ளிகளில், எல்.கே.ஜி. மற்றும் முதல் வகுப்புகளில், சமூக, பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினருக்கு 25 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.

வரும் 2024 - 2025-ம் கல்வி ஆண்டில், 25 சதவீத இடஒதுக்கீட்டில் உள்ள இடங்களில் சேர, https://rte.tnschools.gov.in என்ற இணையதளத்தில், ஏப்ரல் 22 முதல் மே 20 வரை விண்ணப்பிக்கலாம் என்று தனியார் பள்ளிகள் இயக்குநரகம் அறிவித்திருந்தது. அதன்படி 25 சதவீத இடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு மே.20-ம் தேதியுடன் முடிகிறது.

சமூக, பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளே இத்திட்டத்தின் பயனாளிகள். தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் கட்டணம் இல்லாமல் படிக்க முடியும் என்பதே பலருக்கும் தெரியாத நிலை உள்ளது.

கட்டாய கல்வி உரிமைச் சட்டம் பற்றி தமிழக அரசும் பெரிய அளவில் விளம்பரம் செய்யவில்லை. அதற்கான அறிவிப்பு வெளியிட்டதோடு ஒதுங்கிவிட்டது.

எனவே, கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடுவை மே 31-ம் தேதி வரை தமிழக அரசு நீட்டிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

x