மக்கள் விரோத ஆட்சியா மு.க.ஸ்டாலினின் ஆட்சி?


முதல்வர் ஸ்டாலின்

“முத்துவேலர் கருணாநிதியின் மகன் நான்” என்று அடிக்கடி பெருமிதத்துடன் முழங்குகிறார் தமிழக முதல்வர் ஸ்டாலின். அந்த முத்துவேல் கருணாநிதி தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றிய எத்தனையோ நல்ல திட்டங்களை கொண்டு வந்திருக்கிறார். ஆனாலும், மீண்டும் தமிழகத்திற்கு மதுவை அறிமுகப்படுத்தியது உள்ளிட்ட மோசமான முடிவுகளையும் அதே கருணாநிதி எடுத்திருக்கிறார். அதற்கெல்லாம் அவர் ஆயிரம் காரணங்களைச் சொன்னாலும், இன்றளவும் அதன் பாதிப்புகளை எதிர்க்கொண்டு வருகிறது தமிழகம்.

அதுபோல தந்தை வழியில் பல நல திட்டங்களை தந்தாலும் 12 மணி நேர வேலை சட்டம், விளையாட்டு மைதானங்களில் மதுவுக்கு அனுமதி உள்ளிட்ட திட்டங்களை அறிமுகம் செய்து தனது பெயரைக் கெடுத்துக் கொண்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். 12 மணி நேர வேலை சட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டாலும், அதனால் அரசுக்கு எதிராக எழுந்த விமர்சன அலைகள் இன்னும் ஓய்ந்தபாடில்லை. “திருமண மண்டபங்களில் மது விநியோகத்துக்கு அனுமதி இல்லை” என அறிவித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, “மற்ற மாநிலங்களில் இருப்பதைப் போல விளையாட்டு மைதானங்களில் சர்வதேச விளையாட்டுப் போட்டிகள் நடக்கும் போது மட்டும் மது விநியோகத்துக்கு அனுமதிக்கப்படும்” என்று அறிவித்தார். அதற்கும் நீதிமன்றம் இடைக்காலத் தடைவிதித்திருக்கிறது.

தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாற்றப் போகிறோம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த முதல்வர் ஸ்டாலின் திராவிட மாடல் ஆட்சி என தமது ஆட்சிக்கு பெயர் சூட்டினார். ஆனால், அவரால் அறிவிக்கப்படும் திட்டங்களில் சில மக்கள் விரோதமாக இருக்கின்றன. அதைப் பார்த்துவிட்டு, “இதுதான் திராவிட மாடல் ஆட்சியா?” என எதிர்க்கட்சிகள் ஏளனம் செய்கின்றன.

நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளில் மளமளவென்று 17 மசோதாக்கள் பேரவையில் நிறைவேறின. ஆனால், அவை பற்றிய அடிப்படைத் தகவல்களைக் கூட சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தெரிவிக்கவில்லை என்கிறார்கள்.

12 மணி நேர வேலைக்கு வழிவகுக்கும் தொழிற்சாலை திருத்தச் சட்ட மசோதா 65-ஏ, நில ஒருங்கிணைப்பு மசோதா ஆகியவை அதில் முக்கியமானவை. இவை இரண்டுமே மாநிலத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை உண்டாக்கியது. இதற்கு நிகரான எதிர்விளைவை ஏப்ரல் 13-ம் தேதி திமுக அரசு வெளியிட்ட மது விநியோகம் குறித்த அறிவிக்கையும் ஏற்படுத்தியது. இவை நடைமுறைக்கு வந்தால் தமிழ்நாட்டின் எதிர்காலமே கேள்விக்குறியாகிவிடும் என்று சமூக ஆர்வலர்கள் அச்சப்பட்டார்கள்.

12 மணி நேர வேலை என்பது சர்வதேச நிறுவனங்களுக்கு பேருதவியாக இருக்கும். ஒரு வகையில் பார்த்தால் தொழிலாளர்களுக்கும் இது நன்மை தரும் சட்டம்தான் என்றாலும் அவர்கள் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. வெளிநாடுகளில் வாரத்தில் 48 மணி நேரம் வேலை செய்தால் போதும். எஞ்சிய நாட்களை ஓய்வுக்காக எடுத்துக் கொள்ளலாம். எத்தனை மணிக்கு பணிக்கு வரவேண்டும், எத்தனை மணிக்குச் செல்ல வேண்டும் என்கிற வரையறை எல்லாம் கிடையாது.

ஆனால், இங்கு அப்படி இல்லை. காலையில் 10 மணிக்கு வேலைக்குச் சென்றால் மாலை 5 மணிக்கு வீடு திரும்ப வேண்டும். 8 மணி நேர உழைப்பு, எட்டு மணி நேரம் ஓய்வு, எட்டு மணி நேரம் உறக்கம் என்பது நம்மவர்களின் உணர்வோடு கலந்திருக்கிறது. அதை மாற்றுகிறபோது மரபும், மனித உரிமைகளும் மீறப்படும். அதனால் தான் இந்தத் திட்டத்துக்கு எதிராக இத்தனை கண்டனக் குரல்கள். இவ்வளவு கடுமையான எதிர்ப்புகள் வரும் என்று அரசே எதிர்பார்க்கவில்லை.

அதேபோல, திருமண மண்டபங்கள் மற்றும் விளையாட்டு மைதானங்களில் மது விநியோகம் என்பது மிகப்பெரிய பின் விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது. சாதாரணமாகவே பெருவாரியான இடங்களில் மண்டபங்களில் அசைவ விருந்து பரிமாறப்படுவதும் அதற்கு முன்னதாக மறைமுகமாக ஒரு இடத்தில் வைத்து மது விநியோகம் நடைபெறுவதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் மதுவை திருமண மண்டபத்திலேயே அனுமதி பெற்று விநியோகிக்கலாம் என்கிறபோது அது எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை ஆள்பவர்கள் சற்றும் சிந்தித்துப் பார்க்கவில்லை.

சாதாரணமாக, நாட்டில் நடக்கும் பெரும்பாலான குற்றங்களுக்கு மதுவே அடிப்படைக் காரணமாக இருக்கிறது. எங்கோ மறைமுகமாக ஓர் இடத்தில் மது விற்கும்போதே இந்த நிலை என்றால் திருமணம் நடைபெறும் இடத்தில் பகிங்கிரமாகவே மது விநியோகிக்கப்பட்டால் அது எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும்? திருமணம் சுமுகமாக நடைபெறுமா? விருந்து அமைதியாக கடக்குமா? அங்கு வந்திருக்கும் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பாக வீடு திரும்ப முடியுமா? திருமணத்தில் கலந்துகொள்ளும் இளைய சமுதாயம் மது குறித்து எத்தகைய மனப்பான்மைக்கு வரும்? என்றெல்லாம் அரசாங்கம் யோசித்திருக்க வேண்டும்.

அதேபோல மற்றொரு ஆபத்தான மசோதா, ‘தமிழ்நாடு நில ஒருங்கிணைப்புச் சட்டம்’. தமிழ்நாட்டில் சுற்றுச்சூழலை அழிக்கக் கூடிய எந்தவொரு தொழிற்சாலையையும் தாராளமாக கொண்டுவர இந்த மசோதா தங்குதடையற்ற உத்திரவாதத்தை அளிக்கிறது. அதாவது ஆறுகள், ஓடைகள், குளம், குட்டை, ஏரிகள் இவை எல்லாவற்றையும் தொழில் வளர்ச்சிக்காக இழக்கலாம் என்ற தாராளமயம் இந்தச் சட்டத்தில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரமும் இந்தச் சட்டத்தால் பறிக்கப்பட்டுள்ளது. எதைப் பற்றியும் கவலைப்படாமல் எந்தத் தடையுமின்றி தொழிற்சாலைகள் அமைக்க வழி செய்கிறது இந்த சட்டம். இதனை எதிர்த்து விவசாய சங்கங்கள் போராட்டத்தை அறிவித்திருக்கின்றன. கடும் எதிர்ப்புகளை அடுத்து, 12 மணி நேர வேலை சட்டத்தையும் திருமண மண்டபங்களில் மதுவுக்கு அனுமதியளிக்கும் திட்டத்தையும் கைவிட்டிருக்கிறது அரசு. ஆனால், தமிழ்நாடு நில ஒருங்கிணைப்புச் சட்டத்தை அரசு இன்னும் மறுபரிசீலனை செய்யவில்லை.

சொன்னதையும் செய்வோம் சொல்லாததையும் செய்வோம் என்று அடிக்கடி சொல்லி வரும் ஸ்டாலின் அண்மைக்காலமாக, சொல்லாததை, மக்கள் விரும்பாத விஷயங்களைத்தான் நடைமுறைப்படுத்தி வருகிறார். பொதுசுகாதாரத்துறை, போக்குவரத்துத்துறை உள்ளிட்ட முக்கிய துறைகளில் கூட ஒப்பந்த அடிப்படையில் தொழிலாளர்கள் நியமிக்கப் படுகின்றனர். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதாகச் சொல்லி ஆட்சிக்கு வந்த ஸ்டாலின், இப்போது அது சாத்தியமில்லை என்கிறார்.

நிதி ஆதாரத்தைப் பெருக்குவதற்காக தமிழக அரசால் அமைக்கப்பட்ட பொருளாதார ஆலோசனை குழுவால் தமிழக நிதி ஆதாரத்தை பெருக்க இயலவில்லை போலிருக்கிறது. அதனால் தான், சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் பொருட்கள் விலை உயர்வு, கோயில் நிலங்களின் குத்தகை, வாடகைத் தொகை உயர்வு, பத்திரப் பதிவு வரி தொகை உயர்வு முத்திரை தாள் கட்டண உயர்வு, மோட்டார் வாகனங்கள் தொடர்பான ஆர்டிஓ கட்டண உயர்வு என பொது மக்களிடம் இருந்தே நிதி ஆதாரத்தை திரட்டும் வேலைகளைச் செய்கிறது அரசு.

அதேபோல், மக்களைப் பாதிக்கும் பல திட்டங்களுக்கும் திமுக அரசு உறுதுணையாக இருக்கிறது. கடலூர் மாவட்டத்தில் என்எல்சி சுரங்க விரிவாக்கப் பணிகள் மக்கள் எதிர்ப்பு காரணமாக வெகு நாட்களாக தொடங்கப்படாமல் இருந்தது. ஆனால், இந்த ஆட்சியில் போலீஸ் படையை வைத்து அந்தப் பணிகளைத் தொடங்கினார்கள். திமுக கூட்டணிக் கட்சிகளே இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருக்கிறார்கள். எந்த நேரத்திலும் எந்த ரூபத்திலும் இந்தப் பணிகள் மீண்டும் வேகமெடுக்கலாம் என்பதே உண்மை நிலை.

இப்படித்தான் கடந்த அதிமுக ஆட்சியில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட டெல்டாவில் நிலக்கரி சுரங்கங்கள் அமைக்க மத்திய அரசு ஏல அறிவிக்கையை வெளியிட்டதையும் திமுக அரசு கண்டும் காணாமல் இருந்தது. இது விவசாயிகள் போராட்டமாக வெடிக்கும் நிலை வந்த பிறகுதான் சுதாரித்துக்கொண்டு மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார் முதல்வர். ஏலத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருக்கிறார்களே தவிர முழுமையாக ரத்துசெய்யப்படவில்லை. இப்படித்தான் பெட்ரோ கெமிக்கல் மண்டலம் அமைக்கும் திட்டத்தையும் ஆரம்பத்தில் திமுக கண்டும் காணாமல் இருந்தது.

மக்களைப் பாதிக்கும் திட்டங்களை அனுமதிப்பதும் எதிர்ப்புகள் வந்ததும் அதை நிறுத்தி வைப்பதும் மக்களுக்கு இந்த ஆட்சி மீதான நம்பகத்தன்மையை போக்கிவிடாதா என்ற கேள்வியுடன் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் பேசினோம்.

“மாநிலத்தின் வளர்ச்சிக்காகவும், மக்களுக்கு நல்லது செய்வதற்காகவும்தான் சட்டங்களும், திட்டங்களும் கொண்டுவரப்படுகின்றன. எனினும் மக்களுக்கு தீங்கு விளையும் என்று கருதினால், அல்லது அதற்கு மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தால் அதனை உடனடியாக வாபஸ் பெறும் அரசுதான் தற்போதை திமுக அரசு. வேளாண் சட்டங்களை கொண்டுவந்த மோடி அரசு விவசாயிகள் வெகுவாக செத்து மடிந்த பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து அதை வாபஸ் பெற்றதைப் போல திமுக அரசு செய்யவில்லை.

தற்போதைய ஆட்சியில் மக்களுக்குத் தேவையான நூற்றுக்கணக்கான திட்டங்கள் அறிவிக்கப்பட்டு அவை நிறைவேற்றப்பட்டுள்ளன. அதனால் லட்சக்கணக்கான மக்கள் பயனடைந்துள்ளனர். இந்த ஒன்றிரண்டு திட்டங்கள் இப்படி மக்கள் விரும்பவில்லை என்பதால் முதல்வர் உடனடியாக செயல்பட்டு நிறுத்தி வைத்துவிட்டார். எப்போதுமே தொழிலாளர்கள், விவசாயிகள், பெண்கள் என ஒட்டுமொத்த மக்களின் நலனை மட்டுமே சிந்தித்துச் செயல்படுபவர் தான் எங்கள் முதல்வர்” என்றார் அவர்.

மாநிலத்தின் வளர்ச்சிக்கு புதிய திட்டங்கள் தேவை தான். ஆனால், அத்தகைய திட்டங்களைக் கொண்டு வரும்போது அதனால் மக்களுக்கு ஏதும் பாதிப்பு ஏற்படுமா என்பதை எல்லாம் வல்லுநர் குழு மூலம் முன்கூட்டியே ஆய்வு செய்து அதன்பிறகு அந்தத் திட்டங்களைச் செயல்படுத்தினால் எந்தச் சிக்கலும் வரப்போவதில்லை. மாறாக, மக்கள் நலனை புறந்தள்ளிவிட்டு நிர்வாக சீர்திருத்தம் என்ற பெயரில் திட்டங்களைச் செயல்படுத்த நினைத்தால் அது அரசுக்கும் மக்களுக்குமான இடைவெளியை அதிகரித்துவிடும் என்பதை இனியாவது ஆட்சியாளர்கள் உணர்ந்து செயல்பட்டால் நல்லது!

x