மேகேதாட்டு விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாடு தமிழகத்துக்கு எதிராக உள்ளது - அமைச்சர் துரைமுருகன்


சேலம்: மேகேதாட்டு அணை விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாடு தமிழகத்துக்கு எதிராக உள்ளது என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் மேட்டூர் அணையில் இன்று காலை ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது, மேட்டூர் அணையின் 16 கண் பாலம், சுரங்க மின் நிலையம், அணைப் பூங்கா மற்றும் வலது கரை உள்ளிட்ட பகுதிகளை அமைச்சர் நேரில் பார்வையிட்டார். பின்னர், நீர்வளத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'கர்நாடக அரசு எவ்வளவு முயற்சி செய்தாலும் மேகேதாட்டு அணையை கட்ட விடவே மாட்டோம். உச்ச நீதிமன்ற தீர்ப்பிலோ, காவிரி நடுவர் மன்ற தீர்ப்பிலோ மேகேதாட்டு என்ற வார்த்தையே இல்லாத நிலையில், இதுகுறித்து காவிரி நடுவர் மன்றம் பேசுவது மத்திய அரசின் தூண்டுதலாக இருக்குமோ என சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

மேகேதாட்டு அணை விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாடு தமிழகத்துக்கு எதிராக உள்ளது. மேட்டூர் உபரிநீரை பயன்படுத்தக் கூடாது என வழக்குப் போட்டுவிட்டு, உபரிநீர் வீணாவதாக கர்நாடக அரசு கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. மேட்டூர் அணையின் உபரி நீரை முழுமையாக பயன்படுத்த வேண்டும் என்பது எங்களின் ஆசையும்கூட அதற்கு போதுமான அளவில் நிதி தேவைப்படுகிறது' என்று அவர் கூறினார்.

x