கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப் பெருக்கு: தண்ணீரில் மூழ்கிய 50+ செங்கல் சூளைகள்


பாபநாசம் அருகே பட்டுக்குடியில் செங்கல் சூளைகளை சூழ்ந்துள்ள ஆற்று நீர்.

கும்பகோணம்: கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக, பாபநாசம் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் தண்ணீரில் மூழ்கின. திருச்சி மாவட்டம் முக்கொம்பில் கொள்ளிடம் ஆற்றில் நேற்றைய நிலவரப்படி விநாடிக்கு 1.80 லட்சம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

இதனால்,ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக, பாபநாசம் வட்டம் பட்டுக்குடி, கோவிந்தநாட்டுச்சேரி, கூடலூர், புத்தூர் உள்ளிட்ட கரையோர பகுதிகளில் 50-க்கும் அதிகமான இடங்களில் இருந்த செங்கல் சூளைகள் தண்ணீரில் மூழ்கின. மேலும், அந்தக்கரைகளில் சாகுபடி செய்யப்பட்டிருந்த வாழைத் தோப்புகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது.

இதேபோல, மகாராஜபுரத்தில் ஆற்றங்கரையில் வனத் துறை சார்பில் வளர்க்கப்பட்ட தேக்கு, மகாகனி, வேங்கை, புங்கை, பூவரசு, பாதாம் உள்ளிட்ட மரக்கன்றுகள் தண்ணீரில் மூழ்கும் நிலை ஏற்பட்டதால், அங்கிருந்த 1.12 லட்சம் மரக்கன்றுகளை வனத் துறை அலுவலர் பொன்னுசாமி தலைமையிலான வனத் துறையினர் பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு சென்றனர்.

அணைக்கரை பகுதியில் நேற்று மதியம் 1.18 லட்சம் கனஅடி தண்ணீர் கடந்து சென்றதால், அந்தப் பாலம் மற்றும் நீரொழுங்கிகளை சிதம்பரம் நீர்வளத் துறை செயற்பொறியாளர் காந்தரூபன், உதவி செயற்பொறியாளர் குளஞ்சிநாதன் மற்றும் அலுவலர்கள் பார்வையிட்டனர்.

இதேபோல, தஞ்சாவூர் மாவட்டம் கொள்ளிடம் நீர்வளத் துறை உதவி செயற்பொறியாளர் யோகேஸ்வரன், உதவி பொறியாளர் பூங்கொடி மற்றும் அலுவலர்கள், கல்லணையில் இருந்து அணைக்கரை வரை வாகனத்தில் சென்று கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அவர்களுடன், கூடுதல் சிறப்பு கண்காணிப்புக் குழுவைச் சேர்ந்த மதுரை மாவட்ட நீர்வளத் துறை கண்காணிப்பு பொறியாளர் ஜோயல் சதீஷ் தலைமையில், செயற் பொறியாளர் மதன சுதாகரன், உதவி பொறியாளர் முருகன் ஆகியோரும், கொள்ளிடம் ஆற்றின் கரைகளில் கண்காணிப்பு பணி மேற்கொண்டு, கிராமங்களுக்குள் தண்ணீர் புகாதவாறு தடுத்து,அங்குள்ளவர்களை பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

x