சென்னை மாநகராட்சியில் முதல்முறையாக 2000 நாய்களுக்கு உரிமம் விநியோகம்: பரிசீலனையில் 3000 விண்ணப்பங்கள்


சென்னை: சென்னையில் சிறுமியை நாய்கள் கடித்து குதறிய சம்பவத்துக்கு பிறகு, செல்லப் பிராணிகள் வளர்ப்புக்கான கட்டுப்பாடுகளை மாநகராட்சி தீவிரப்படுத்தியுள்ளது. இதனால், நாய்களுக்கு உரிமம் கோரி விண்ணப்பிப்போர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதுவரை 2,123 நாய்களுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது.

வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகளுக்கு சென்னை மாநகராட்சியிடம் உரிமம் பெறுவது கட்டாயம். இதன்மூலம், அவற்றுக்கு தடுப்பூசி போடுவது உறுதி செய்யப்படுகிறது. குடற்புழு நீக்கமும் செய்யப்பட்டு, அவற்றின் ஆரோக்கியம் உறுதி செய்யப்படுகிறது.

அவ்வாறு உரிமம் பெறாதவர்களிடம் மாநகராட்சி விளக்கம் கேட்கும். விளக்கம் திருப்தி இல்லாவிட்டால், அபராதம் விதிக்கவும் வழி உண்டு.கடந்த மே 5-ம் தேதி நுங்கம்பாக்கத்தில் ஒரு சிறுமியை நாய்கள் கடித்து குதறிய சம்பவத்துக்கு பிறகு, செல்லப் பிராணிகள் மற்றும் வளர்ப்பு நாய்களுக்கான கட்டுப்பாடுகளை மாநகராட்சி நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது.

அபராதம் விதிக்க திட்டம்: உரிமம் பெறாதவர்களுக்கு விதிக்கப்படும் அபராதம் மிகவும் குறைவாக இருப்பதால், தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வந்த பிறகு, குறைந்தபட்சம் ரூ.1,000 அபராதம் விதிக்க வழிவகை செய்வதற்கு மன்றஅனுமதி கோரவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில், செல்லப் பிராணிகளுக்கு உரிமம் கோரி ஏராளமானோர் விண்ணப்பித்து வருகின்றனர். இதன்மூலம் உரிமம் பெறுவோர் எண்ணிக்கையும், விண்ணப்பிப்போர் எண்ணிக்கையும் மாநகராட்சி வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு உச்சத்தை தொட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி தலைமை கால்நடை மருத்துவ அலுவலர் கமால் உசேன் கூறும்போது, ‘‘கடந்த ஆண்டில் 1,560 பேர் மட்டுமே செல்லப் பிராணிகளுக்கான உரிமம் பெற்றிருந்தனர்.

10 ஆயிரம் நாய்கள்: இந்த ஆண்டில்கூட மே 5-ம் தேதிக்கு முன்பு வரை சுமார் 130 பேர் மட்டுமே உரிமம் பெற்றிருந்தனர். மே 20-ம் தேதி (நேற்று) காலை நிலவரப்படி 2,123 பேர் உரிமம் பெற்றுள்ளனர். 2,985 பேரின் விண்ணப்பம் பரிசீலனையில் உள்ளது. இந்த ஆண்டு சுமார் 10 ஆயிரம் நாய்களுக்கு உரிமம் வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளோம்’’ என்றார்.

x