தேனி: ஆடிப் பெருக்கு தினத்தை முன்னிட்டு தேனியில் முல்லை பெரியாற்றுக்கு சீர்வழங்கி பெண்கள் சிறப்பு வழிபாடு செய்தனர்.
ஆடிப்பெருக்கு தினத்தில் ஆறுகளிலும், நதிகளிலும் நீராடி வழிபாடு செய்யும் பழக்கம் தொன்றுதொட்டு இருந்து வருகிறது. இந்நாளில் செய்யப்படும் காரியம் நதிபோல பெருக்கெடுக்கும் என்பது ஐதீகம். இதன்படி இன்று தேனி வீரபாண்டி கண்ணீஸ்வரமுடையார் கோயில் ஆற்றங்கரையில் ஏராளமான பெண்கள் வழிபாடு நடத்தினர். ஆற்றங்கரையில் அமர்ந்து நீர் தெய்வமான கங்கா தேவியின் உருவத்தை அலங்கரித்து ஆராதனை செய்து படையலிட்டனர்.
பெண்கள் பலரும் புது மாங்கல்ய நாண்களை மாற்றிக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து முல்லை பெரியாற்றுக்கு சீர் செய்யப்பட்டது. இதற்காக மஞ்சள், விபூதி, குங்குமம், பிரசாதங்களை ஆற்றில் விட்டனர். வீரபாண்டி கவுமாரியம்மன் கோயிலில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு ஏராளமானோர் கூழ், சுண்டல், புளியோதரை, பொங்கல் உள்ளிட்டவற்றை படைத்து, பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கினர்.
இதேபோல் வீரபாண்டி 18-ம்படி கருப்பணசாமி, பழனிசெட்டிபட்டி அணை கருப்பசாமி, தேனி சடையால் முனீஸ்வரன் கோயில்களிலும் ஆடிப் பெருக்கை முன்னிட்டு அன்னதானம் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.