வயநாடு நிலச்சரிவில் 24 தமிழர்கள் உயிரிழப்பு: 25 பேர் மாயம்!


வயநாடு: நிலச்சரிவில் 24 தமிழர்கள் உயிரிழந்துள்ளதாகவும், 25 தமிழர்களை காணவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 350-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 200-க்கும் மேற்பட்டோரை காணவில்லை. ஐந்தாவது நாளாக இன்று மீட்புப் பணிகள் தொடர்ந்து வருகிறது.

கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் தொடா் கனமழையால் கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூலை 30) அதிகாலை அடுத்தடுத்து நிலச்சரிவுகள் ஏற்பட்டன. முண்டக்கை, சூரல்மலை உள்ளிட்ட பல மலைக் கிராமங்களில் வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்த மக்கள் உயிரோடு மண்ணில் புதைந்து மண்ணோடு மண்ணாக மாய்ந்தனர்.

வயநாடு நிலச்சரிவில் சிக்கிய தமிழர்களுக்கு உதவி செய்ய தமிழகத்தில் இருந்து இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அங்கு சென்று ஆய்வு செய்ததில், வயநாட்டில் வசித்த தமிழர்கள் 21 பேர் மற்றும் தமிழகத்தில் இருந்து வேலைக்கு சென்ற 3 பேர் என மொத்தம் 24 பேர் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது.

மேலும், இந்த நிலச்சரிவால் 25 தமிழர்களைக் காணவில்லை எனவும் தெரியவந்துள்ளது. காணாமல் போனவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டை சேர்ந்த 130 பேர் நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

x