புழல் சிறையில் இட நெருக்கடி: 41 கைதிகள் செங்கல்பட்டு கிளை சிறைக்கு இடமாற்றம்


புழல் சிறை

செங்கல்பட்டு: இட நெருக்கடி காரணமாக, சென்னை புழல் சிறையில் இருந்து 41 கைதிகள் செங்கல்பட்டு கிளை சிறைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்றிரவு இடமாற்றம் செய்யப்பட்டனா்.

சென்னை அருகே புழலில் 77 ஏக்கர் பரப்பளவில் சிறை உள்ளது. இந்த வளாகத்தில் இருக்கும் 3 சிறைகளில், விசாரணைக் கைதிகள், தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் புழல்-2 சிறையில் 1,250 கைதிகளை மட்டும் அடைக்கும் கட்டமைப்பு வசதி உள்ளது. ஆனால், இங்கு அதைவிட அதிக கைதிகள் அடைக்கப்பட்டிருந்தனா்.

இதனால் இட நெருக்கடி ஏற்பட்டது. இதனால் புழல் -2 சிறையில் இருந்த தண்டனைக் கைதிகளில் 41 கைதிகள் செங்கல்பட்டில் உள்ள கிளை சிறைக்கு பலத்த துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் நேற்று இரவு இடமாற்றம் செய்யப்பட்டனா்.

செங்கல்பட்டு கிளை சிறை சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இங்கு 150 கைதிகள் தங்கும் வசதி உள்ளது. சமீபத்தில் இங்கு ரூ.1.6 கோடியில் கூடுதல் கட்டிடம் கட்டப்பட்டு முதல்வர் திறந்து வைத்தார். அதில் 150 பேர் தங்கும் வசதி உள்ளது. தற்போது இங்கு கைதிகளின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளதால் புழல் சிறையில் இருந்து கைதிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சிறைத்துறையினர் தெரிவித்தனர்.

x