அரசு பள்ளி மாணவர் உயர்கல்வி நிறுவனத்தில் சேர்க்கை பெறுவது சமூக - பொருளாதார மாற்றத்துக்கு அடித்தளம்: முதல்வர் ஸ்டாலின்


முதன்மை உயர்கல்வி நிறுவனங்களுக்கு செல்லும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் மடிக்கணினியை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், அன்பில் மகேஸ், க.பொன்முடி, பி.கே .சேகர்பாபு ஆகியோர் உடனிருந்தனர். | படம்: எஸ்.சத்தியசீலன் |

சென்னை: அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர்கள் சிறந்த உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெறுவது மாபெரும் சமூக, பொருளாதார மாற்றத்துக்கு அடித்தளமாக இருக்கும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

தமிழக அரசுப் பள்ளிகளில் படித்து, மாநில, தேசிய மற்றும் சர்வதேச அளவில் சிறந்த உயர் கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற்ற 461 மாணவர்களுக்கான பாராட்டு விழா சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்வர் ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ், மடிக்கணினி வழங்கினார்.

விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: திமுக ஆட்சிக்கு வந்த 3 ஆண்டுகளில், தேசிய அளவில் முன்னிலையில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் தமிழக அரசுப் பள்ளி மாணவர்கள் அதிக அளவில்சேர்க்கை பெற்று வருகின்றனர். 2022-ம் ஆண்டு 71 பேர், 2023-ல்274 பேர், 2024-ல் 447 பேர் என இந்தஎண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்துவருகிறது. 14 மாணவர்கள் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி பயிலும் வாய்ப்பு பெற்றுள்ளனர்.

வெளிநாடுகளில் கல்வி பயிலும்வாய்ப்பு பெற்ற மாணவர்களுக்கான முழு கல்வி செலவு மற்றும் முதல் பயண செலவை அரசு ஏற்கும். விரைவில் விண்வெளி துறையிலும்கூட நமது அரசுப் பள்ளி மாணவர்கள் தடம் பதிப்பார்கள்.

இதுதவிர, அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர்கள் சிறந்த உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெறுவது மாபெரும் சமூக, பொருளாதார மாற்றத்துக்கு அடித்தளமாக இருக்கும். மாணவர்கள் படிப்பில் மட்டும் கவனம் செலுத்துங்கள். தமிழக அரசு எப்போதும் உறுதுணையாக இருக்கும். இவ்வாறு பேசினார்.

முன்னதாக, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பேசும்போது, ‘‘தமிழகத்தில் கல்வித்துறைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. அதன்பலனாக, பின்தங்கிய பகுதிகளை சேர்ந்த 65 பேர், மாற்றுத் திறனாளிகள் 54 பேர் உட்பட இந்த ஆண்டில் 447 மாணவர்கள் நாட்டின் முதன்மை உயர்கல்வி நிறுவனங்களில் கல்வி பயில தேர்வாகியுள்ளனர். தமிழகத்தில் ‘அனைவருக்கும் கல்வி’ திட்டத்துக்கு தரவேண்டிய நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. ஆனாலும், முதல்வர் ஸ்டாலின் உங்களில் ஒருவனாக இருந்து, பள்ளிக்கல்வித் துறைக்கு தொடர்ந்து உதவிகளை வழங்கி வருகிறார்’’ என்றார்.

பள்ளிக்கல்வித் துறையில் உதவியாளர் பணியிடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வான 448 பேருக்கு பணிநியமன ஆணைகளையும் முதல்வர் வழங்கினார்.

அமைச்சர்கள் பொன்முடி, மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி, பள்ளிக்கல்வித் துறை செயலர் சோ.மதுமதி, இயக்குநர் ச.கண்ணப்பன், தமிழ்நாடு மாதிரிப்பள்ளிகள் உறுப்பினர் செயலர் இரா.சுதன் கலந்துகொண்டனர்.

x