ராமேசுவரம் மீனவர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு


ராமேசுவரம்: ராமேசுவரத்தில் இருந்து கடலுக்குச் சென்ற விசைப்படகு மீது இலங்கை கடற்படை ரோந்துக் கப்பல் மோதியதில், மீனவர் மலைச்சாமி(59) கடலில்மூழ்கி உயிரிழந்தார். மேலும்,மீனவர் ராமச்சந்திரன் (64) மாயமாகி உள்ளார். முத்து முனியாண்டி (57), மூக்கையா(54)ஆகியோர் இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்டு, காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இந்நிலையில், ராமேசுவரத்தில் நேற்று அனைத்து விசைப்படகு மீனவ சங்கங்களின் அவரச ஆலோசனைக் கூட்டம், மீனவப் பிரதிநிதி சகாயம் தலைமையில் நடைபெற்றது. இதில், மலைச்சாமியின் உடலை தாயகத்துக்கு கொண்டுவர வேண்டும், மாயமான மீனவர் ராமச்சந்திரனை தேடிக் கண்டுபிடித்து தர வேண்டும், முத்து முனியாண்டி, மூக்கையா மீது எந்த வழக்கும் பதிவு செய்யாமல், தாயகத்துக்கு அழைத்து வர வேண்டும், மூழ்கிய படகின் உரிமையாளர் கார்த்திகேயனுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், இலங்கை கடற்படையினரை கண்டித்தும் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதற்கிடையில், மீனவர்கள் முத்து முனியாண்டி, மூக்கையாஆகியோர் வழக்கு எதுவுமின்றி, யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரக அதிகாரிகளிடம் நேற்று மதியம் ஒப்படைக்கப்பட்டனர். உயிரிழந்த மீனவர் மலைச்சாமியின் உடல், யாழ்ப்பாணம் தலைமை மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது.

மேலும், 2-வது நாளாக கடலில் மாயமான மீனவர் ராமச்சந்திரனை தேடும் பணி ஹெலிகாப்டர், ரோந்துப் படகுகள் மூலம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

x