கோவை: போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் பெண் போலீஸாரை தரக்குறைவாகவும், அவதூறாகவும் பேசியதாக யூடியூபர் சவுக்கு சங்கரை கோவை மாநகர சைபர் கிரைம் போலீஸார் சில மாதங்களுக்கு முன்னர் கைது செய்தனர்.
அவர் மீது சென்னை, திருச்சி, சேலம் உள்பட பல்வேறு பகுதிகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதன் காரணமாக அவரை போலீஸார் பல்வேறு பகுதிகளில் உள்ள நீதிமன்றங்களுக்கு விசாரணைக்காக அழைத்துச்சென்று வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 31-ம் தேதி ஒரு யூடியூப் சேனலில் சவுக்கு சங்கர், பெலிக்ஸ் ஜெரால்டு ஆகியோர் சுதந்திர போராட்ட வீரர் முத்துராமலிங்க தேவர் குறித்து அவதூறு பரப்பும் வகையிலும் இரு தரப்பினர் இடையே கலவரத்தை தூண்டும் வகையிலும் பேசியதாக தெரிகிறது. இது குறித்து கோவையில் உள்ள ரேஸ்கோர்ஸ் போலீஸாரிடம் புகார் செய்யப்பட்டது.
அதன் பேரில், போலீஸார் சவுக்கு சங்கர், பெலிக்ஸ் ஜெரால்டு ஆகியோர் மீது அவதூறாக பேசுதல், இருபிரிவினரிடையே கலவரத்தை தூண்டுதல் உள்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து இருந்தனர். இந்நிலையில் சுதந்திர போராட்ட வீரர் முத்துராமலிங்க தேவரை அவதூறாக பேசிய வழக்கில் ரேஸ்கோர்ஸ் போலீஸார் நேற்று (ஆக.2) சவுக்கு சங்கரை கைது செய்தனர். இதற்காக அவர்கள் சென்னை புழல் சிறைக்கு சென்று, அவரை கைது செய்ததற்கான ஆவணங்களை காட்டி, சவுக்கு சங்கரை பலத்த பாதுகாப்புடன் இன்று இரவு கோவை அழைத்து வந்தனர். 4-வது மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.