கிணறு தூர்வாருவதாக மோசடியில் ஈடுபடும் கும்பல்: நடவடிக்கை எடுக்கக்கோரி விழுப்புரம் எஸ்பியிடம் புகார்


விழுப்புரம் எஸ்பி அலுவலகத்தில் புகார் அளிக்க வந்த சமூக ஆர்வலர்கள்

விழுப்புரம்: விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில், கடந்த 31ம் தேதி கிணறு வெட்டியதற்கான கூலியை தர மறுப்பதாகச் சொல்லி சேலம் மாவட்டம் தாரமங்கலத்தை சேர்ந்த கிணறு வெட்டும் தொழிலாளர்கள் தீக்குளிக்க முயற்சித்தனர். இந்நிலையில் இன்று விழுப்புரம் எஸ்பி அலுவலகத்தில் விழுப்புரத்தைச் சேர்ந்த அகிலன் என்பவர் சமூக ஆர்வலர்கள் தலைமையில் புகார் மனு அளித்தார்.

அந்த மனுவில், "விழுப்புரம் மாவட்டத்தில் சமீப காலமாக கிணறுகளை சுத்தம் செய்து தருவதாகக் கூறி, கும்பல் ஒன்று மோசடியில் ஈடுபட்டு வருகிறது. விக்ரவாண்டி ஒன்றியத்தில் தனியார் பள்ளி தாளாளரிடமும் இந்த மோசடிக் கும்பல் ரூ10,000-க்கு கிணறு தூர்வாரித் தருவதாக கூறி பணியைத் துவங்கிவிட்டு ரூ.3 லட்சம் தந்தாக வேண்டும் என மிரட்டி ரூ.1 லட்சத்தை வேலை செய்யாமலேயே மோசடி செய்து பெற்றுள்ளனர்.

இதைப்போல் லட்சுமிபுரம் கிராமத்தில் செயல்பட்டு வரும் பள்ளியின் தாளாளரிடம் கிணறு தூர்வாருவதாகக் கூறி ரூ.8,000 தந்தால் போதும் எனக்கூறி சிறிய பாக்கெட் நோட்டில் கையொப்பம் பெற்றுவிட்டு பணியை துவங்கியவர்கள், அதன் பின்பு மிரட்டி எந்தப் பணியும் செய்யாமல் ரூ.50,000-ஐ பிடுங்கியுள்ளனர். மேலும், இக்கும்பல் 2021-ம் ஆண்டில் பல்லடம் பகுதியிலுள்ள கிராமங்களில், கிணறுகளை சுத்தம் செய்து தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டு வந்தது தொடர்பாக நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியாகியுள்ளது.

தற்போது விக்கிரவாண்டி அருகே மேலக்கொந்தையில் கிணற்றை தூர்வாரித் தருவதாகக் கூறி ரூ.85,000 தந்தால் போதும் எனக் கூறி ஒப்பந்தம் செய்துவிட்டு ரூ.36 லட்சம் தர வேண்டும் என்று மிரட்டி, உரிமையாளர் வீட்டை முற்றுகையிட்டனர்.

இதுதொடர்பாக விக்கிரவாண்டி போலீஸில் புகார் அளித்ததன் பேரில் காவல் ஆய்வாளர் விசாரணை மேற்கொண்டு அந்த கிணற்றில் எந்த அளவிற்கு வேலை நடைபெற்றுள்ளது என்பதை அறியவும் அரசு மதிப்பீடு தொகையினை அறியவும், ஊராட்சி ஒன்றிய பொறியாளரிடம் மதிப்பீடு அறிக்கையை கோரினார். அதன் அடிப்படையில் மேற்படி கிணற்றை ஆய்வு செய்து ரூ.62,852-க்கான வேலை நடைபெற்றுள்ளது என்று பொறியாளர் அறிக்கை சமர்பித்துள்ளனர்.

இதனை ஏற்க மறுத்த அக்கும்பல் ரூ.36 லட்சத்தை தந்தாக வேண்டும் என்று தற்போது பணம் பறிக்க முயற்சித்து வருகின்றனர். இக்கும்பலில் உள்ள யாரிடமும் ரேஷன் கார்டு, ஆதார் உள்ளிட்ட எந்த வித ஆவணங்களும் இல்லை. இது போன்ற மோசடி கும்பலிடம் விவசாயிகள் யாரும் ஏமாந்து விடக்கூடாது. எனவே, நூதன முறையில் மோசடி செய்து வரும் இந்தக் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

x