மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிக்கு சுற்றுச்சூழல் அனுமதி


மதுரை: மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே தோப்பூரில் மத்திய அரசின் ‘எய்ம்ஸ்' மருத்துவமனை ரூ.1,977.8 கோடி மதிப்பீட்டில் 222 ஏக்கரில் கட்டப்படுகிறது.

இந்தியாவின் மிகப் பெரிய கட்டுமான நிறுவனமான எல் அன்ட் டி நிறுவனம் எய்ம்ஸ் கட்டுமானப்பணியை டெண்டர் எடுத்துள்ளது. இரு கட்டங்களாக 33 மாதங்களில் பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ள அந்நிறுவனம் சமீபத்தில் கட்டுமானப் பணிக்கான பூமி பூஜையை நடத்தியது.

எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிக்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரி எய்ம்ஸ் நிர்வாகம்சார்பில் மே 2-ம் தேதி தமிழக சுற்றுச்சூழல் துறையிடம் விண்ணப்பித்தது. மே 10-ம் தேதி சுற்றுச்சூழல் அனுமதி வழங்கலாம் என்று வல்லுநர்கள் குழு சுற்றுச்சூழல் துறைக்கு பரிந்துரை செய்தது.

அதன்படி, எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிக்கு சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கியுள்ள தமிழக அரசு, நிபந்தனைகளை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. சுற்றுச்சூழல் அனுமதி கிடைத்துவிட்டதால் திட்டமிட்டபடி 33 மாதங்களில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிமுடிக்கப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

x