25 லட்சியம்; 9 நிச்சயம்: பிரதமரை வைத்து பிரச்சாரத்தை தொடங்கிய பாஜக!


பொம்மன் பெள்ளி தம்பதியுடன் பிரதமர் மோடி...

சென்னை-கோவை வந்தேபாரத் ரயில் தொடக்கம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை துவக்கிவைக்க கடந்த வாரம் தமிழகம் வந்தார் பிரதமர் மோடி. திட்டங்களை தொடங்கி வைக்கத்தான் வந்தார் என்றாலும் அவரது இந்தப் பயணம் மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் தொடக்கமே என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

இதற்கு முன் இல்லாத அளவுக்கு இம்முறை தனது பயணத்தை தேர்தல் பிரச்சாரப் பயணமாகவேதான் மேற்கொண்டிருந்தார் மோடி. அதற்கேற்பவே தமிழக பாஜகவும் பார்த்துப் பார்த்து ஏற்பாடுகளைச் செய்திருந்தது. சென்னைக்கு அவர் இதற்கு முன்பு வந்த சமயங்களில் ‘கோபேக் மோடி’ ஹேஷ்டேக் தான் டிரண்ட் ஆனது. இம்முறை அப்படி எதையும் நடக்க பாஜகவினர் விடவில்லை. ’வணக்கம் மோடி’ என்ற ஹேஷ்டேக் பாஜகவினர் மூலம் டிரண்ட் ஆக்கப்பட்டது.

மோடி சென்ற வழியெல்லாம் பாஜகவினர் திரளாக கொடிகளோடு காத்திருந்து அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பல்லாவரத்தில் நடந்த கூட்டத்தில், ‘ஸ்டாலின் வாழ்க’ முழக்கத்துக்கு நிகராக ‘மோடி வாழ்க’ முழக்கமும் எதிரொலித்தது. அந்த அளவுக்கு திமுகவுக்கு சமமாக பாஜகவினர் நிரம்பியிருந்தனர்.

இத்தனை வரவேற்பையும், உற்சாகத்தையும் பார்த்த பிரதமர் மோடி, அதே உற்சாகத்தோடு பிரச்சாரத்தையும் தொடங்கினார். பாஜக அரசு தமிழகத்துக்கு என்னவெல்லாம் செய்திருக்கிறது என்பதுதான் அவரது உரையின் மையக்கருத்து. அதை எடுத்துச்சொல்லி மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தையும் செவ்வனே மேற்கொண்டார்.

”தமிழகத்திற்கு வருவது எப்போதும் பெருமைக்குரிய விஷயம். அதை அருமையான அனுபவமாக உணர்கிறேன். தமிழகம், மொழி மற்றும் இலக்கியத்தின் மையமாக திகழ்கிறது. பல சுதந்திர போராட்ட வீரர்களை உருவாக்கியது தமிழகம் என்றால் அது மிகையல்ல. இது ஒரு வரலாற்று பெருமைக்குரிய இடம். தேசபக்தி, தேச ஒற்றுமை, தேசத்தின் மீது அன்பு கொண்ட மக்கள் தமிழக மக்கள்” என்றெல்லாம் புகழ்ந்த மோடி, தமிழகத்துக்காக மத்திய அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களையும் பட்டியலிட்டார். வெளிப்படையாக வாக்கு மட்டும் தான் கேட்கவில்லையே தவிர தேர்தல் பிரச்சாரத்துக்கான மற்ற அனைத்து அம்சங்களையும் அழகாக பேசிவிட்டுப் போயிருக்கிறார் மோடி.

மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் 25 இடங்களில் நாங்கள் வெற்றிவாகை சூடுவோம் என பாஜக தரப்பில் சொல்லப்பட்டாலும், இம்முறை 9 தொகுதிகளில் நிச்சயம் என்ற லட்சியக் கனவுடன் இருக்கிறார்கள் தாமரை தலைவர்கள். அந்த 9 தொகுதிகளை குறிவைத்து தேர்தல் பணிகளை முன்கூட்டியே தொடங்கிவிட்டது பாஜக. கோவை, நீலகிரி, ஈரோடு, சிவகங்கை, கன்னியாகுமரி, சிதம்பரம், ராமநாதபுரம், திருநெல்வேலி, வேலூர் ஆகியவைதான் அந்த 9 தொகுதிகள் என்றும் சொல்லப்படுகிறது. அண்மைக்காலமாகவே இந்தத் தொகுதிகளுக்கு தனி முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. ராமநாதபுரத்தில் பிரதமர் மோடியே நிற்கவேண்டும் என்று நயினார் நாகேந்திரன் போன்ற தமிழக பாஜகவினரின் பேச்சிலிருந்து தமிழகத்தை இம்முறை எந்த அளவுக்கு முக்கியமாகப் பார்க்கிறார்கள் என்பதை உணரமுடியும்.

ராமநாதபுரத்தில் மோடி நிற்கிறாரோ இல்லையோ நீலகிரியில் மத்திய அமைச்சர் எல்.முருகன் தான் வேட்பாளர் என்பதை அக்கட்சி உறுதி செய்துவிட்டதாகச் சொல்கிறார்கள். அங்கு நிச்சயம் வெற்றிபெற்றே ஆகவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு வேலை செய்கிறது பாஜக. அதன் ஒரு அங்கம்தான் பிரதமரின் நீலகிரி பயணம் என்கிறார்கள்.

எதிர்கட்சிகள் யார் பிரதமராக வரக்கூடாது என்று யோசிப்பது போல பாஜகவும் தமிழகத்தில் யார் வெற்றிபெறக்கூடாது என்பதில் கவனமாகவே இருக்கிறது. சித்தாந்த ரீதியாக பாஜகவுக்கு கடுமையான எதிர்ப்பையும், நெருக்கடியையும் தரும் தொல்.திருமாவளவனையும், ஆ.ராசாவையும் தோற்கடித்தே ஆகவேண்டும் என்பது பாஜகவின் செயல்திட்டம் என்கிறார்கள். இந்த இருவரால் தான் பாஜகவுக்கு எதிரான வாதங்கள், கட்டமைப்புக்கள் வலுவாக உருவாகின்றன என்று பாஜக கருதுகிறது. இவர்களின் தோல்வி தங்களின் வளர்ச்சிக்கு வழிகோலும் என்று நம்புகிறது பாஜக. அதனால் இவர்கள் இருவரையும் வீழ்த்த களம் அமைக்கிறார்கள்.

திருமாவளவன் சுமார் 3 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில்தான் கடந்த முறை சிதம்பரத்தில் வென்றார். அதனால் அவரை இம்முறை எளிதாக தோற்கடித்துவிடலாம் என்று கணக்கிட்டு சில வேலைகளை அங்கு பாஜக தொடங்கியுள்ளது. ஆனால், ஆ.ராசாவை தோற்கடிப்பது அவ்வளவு எளிதில்லை என்பதால் பிரதமர் மோடியும், அமித்ஷாவும் அங்கு சிறப்புக் கவனம் செலுத்துகிறார்களாம். அதற்காகவே அங்கு எல்.முருகனை நிற்க வைக்க முடிவுசெய்திருக்கிறார்கள். அவர் சார்ந்த பழங்குடி மக்கள் அங்கு அதிகம் உள்ளதால் எல்.முருகன்தான் ராசாவை எதிர்க்க சரியான வேட்பாளர் என்ற முடிவில் இருக்கிறது பாஜக. அங்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதை ஏற்கெனவே அமித்ஷா போட்டுக்கொடுத்த திட்டத்தின்படி முருகன் பணிகளைத் தொடங்கிவிட்டார். அதன் ஒரு அங்கமே மோடியின் நீலகிரி வருகையும்.

பிரதமரின் நீலகிரி வருகை அங்குள்ள பழங்குடி மக்களை கவரும் நோக்கிலேயே வடிவமைக்கப்பட்டு இருந்தது. ஆஸ்கர் விருது புகழ் பழங்குடியினரான பொம்மன் - பெள்ளி தம்பதியை அவர் சந்தித்ததும், அவர்களைப் போலவே உடையணிந்துகொண்டு அவர்களிடம் நெருக்கமாக உரையாடியதும், தெப்பக்காட்டில் காத்திருந்த பழங்குடியின மக்களை நெருங்கி கைகாட்டி பேசிவிட்டுச் சென்றதும் பழங்குடி மக்களை கவரும் திட்டத்தின் ஒருபகுதியே.

பிரதமரின் இந்த வருகைக்குப் பிறகு, பழங்குடியினரை ஒருங்கிணைப்பது, அவர்களுக்காக நலத்திட்டங்களை விரைந்து செயல்படுத்துவது, வங்கிக்கடன், வீடுகட்டும் திட்டம் உள்ளிட்ட பல அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகும் என்கிறார்கள். எல்.முருகன் கட்சியில் எவ்வளவு முக்கியமானவர் என்பதை நீலகிரி மக்களுக்கும், தமிழகத்துக்கும் உணர்த்த அடுத்த திட்டமும் பாஜகவிடம் தயாராக இருக்கிறது. எல்.முருகனை தலைவராகக் கொண்டு தேர்தல் பணிக்குழு அமைக்க பாஜக முடிவுசெய்துள்ளதாக தெரிகிறது. பலத்த கருத்து மோதல்களுக்கு பின்னர் அதிமுகவோடு பேச இனி அண்ணாமலையை இறக்க முடியாது என்பதால் முருகனை பயன்படுத்தப் பார்க்கிறார்கள். அவர் பேசவேண்டிய விதமாகப் பேசி அதிமுகவோடு கூட்டணியைத் தொடரவும், கூடுதல் எண்ணிக்கையில் இடங்களை கேட்டுப்பெறவும் செய்வார் என பாஜக நம்புகிறது.

இப்படி பாஜக தமிழகத்தில் கிட்டத்தட்ட மக்களவைத் தேர்தல் பணிகளை தொடங்கிவிட்ட நிலையில், இன்னொரு பக்கம் கட்சியை வலுப்படுத்தும் வேலைகளும் விறுவிறுப்பாக நடக்கின்றன. கட்சிக்குள் ஆளுமைகளைக் கொண்டு வந்து சேர்க்கும் வேலைகள் மும்முரமாக தொடங்கியிருக்கிறது. அதில் முதல் ஆளாக உள்ளே வந்திருக்கிறார் முன்னாள் எம்பி-யான மைத்ரேயன். அவரோடு இன்னும் பலர் உள்ளே வர இருக்கிறார்கள். மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள், ஒரு எம்எல்ஏ, இரண்டு நடிகர்கள், ஒரு பல்கலைக்கழக நிறுவனர், ஒரு ஜாதிச்சங்க பிரபலம் உள்ளிட்ட பலரும் அடுத்தடுத்து பாஜகவில் இணைய இருப்பதாக பாஜகவுக்குள் பலமான பேச்சு உலவுகிறது.

பிரதமரின் தமிழக பயணம் தேர்தல் பிரச்சாரப் பயணம் தானா என்ற கேள்வியுடன் பாஜக மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதியிடம் பேசினோம்.

"எல்லாவற்றையும் அரசியலாக பார்ப்பது என்ன மன நிலை என்றே தெரியவில்லை. இந்தியாவுக்கு உலக அளவில் புகழ் சேர்த்த ஒரு தம்பதியை பிரதமர் நேரில் தேடிச்சென்று அவர்களுடன் அளவளாவி பாராட்டி இருக்கிறார். அதையும் அரசியலாகப் பார்க்கிறார்கள். தேர்தல் பிரச்சாரம் பயணம் என்றால் அதை மேட்டுப்பாளையத்தில் இருந்தே துவங்கி இருக்க வேண்டும். அப்படியா செய்தார்?

மோடி எங்கு போனாலும் தேர்தல் பிரச்சார பயணம் என்று சொல்லும் மனநிலையை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 2024 தேர்தலைச் சந்திக்க தமிழக பாஜக உறுதியாகவும், தயாராகவும் இருக்கிறது. அந்தத் தொகுதி, இந்தத்தொகுதி என்றில்லாமல் மொத்தமுள்ள 39 தொகுதிகளிலும் பாஜக வேலையை தொடங்கியிருக்கிறது.

பூத் கமிட்டிகள் அமைப்பது உள்ளிட்ட கட்சியைப் பலப்படுத்தும் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. எல்.முருகன் தலைமையில் தேர்தல் பணிக்குழு அமைக்கப்படவிருப்பதாக கூறப்படுவது பற்றி எனக்கு எதுவும் தெரியாது, அதிகாரபூர்வமான தகவலாக இருந்தால்தான் அதுபற்றி கருத்துச்சொல்ல இயலும்” என்றார் அவர்.

வட மாநிலங்களில் சரிந்துவரும் தங்கள் செல்வாக்கை தென் மாநிலங்களில் ஈடுகட்டும் பாஜகவின் முயற்சியில் தமிழகம் மிக முக்கிய கவனத்தைப் பெற்றிருக்கிறது. அண்ணாமலையின் செயல்பாடுகளால் தமிழகத்தில் பாஜக குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பெற்றிருப்பதாக பாஜக தலைமை நம்புகிறது. அதனால் குறைந்தபட்சம் 9 எம்பி-க்களை தமிழகத்திலிருந்து டெல்லிக்கு அனுப்ப திட்டமிட்டு அதற்கான அனைத்து முயற்சிகளையும் பாஜக எடுத்து வருகிறது. இதைச் சிறப்பாக செய்துமுடிக்க பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவின் அடுத்தடுத்த பயணங்கள் உட்பட ஏராளமான திட்டங்களை தமிழகத்தில் பாஜக செயல்படுத்தும் என்கிறார்கள்.

அவை அத்துணையும் திராவிட மண்ணாகப் பிரகடனப் படுத்தப்பட்டுள்ள தமிழகத்தில் தாமரைக் கட்சிக்கு தக்க பலனைக் கொடுக்குமா?

x