பட்டீஸ்வரம் பஞ்சவன்மாதேவி பள்ளிப்படையில் ராஜேந்திர சோழன் திருவாதிரை ஜென்ம நட்சத்திர விழா


கும்பகோணம்: பட்டீஸ்வரத்தில் பஞ்சவன்மாதேவி பள்ளிப்படை மாதேஸ்வரம் என்றழைக்கப்படும் விமலநாயகி உடனாய ராமநாதசுவாமி கோயிலில் முதலாம் ராஜேந்திர சோழனின் திருவாதிரை ஜென்ம நட்சத்திர விழா இன்று நடைபெற்றது.

ராஜராஜ சோழனின் முதல் மனைவி வானமாதேவிக்கு பிறந்த முதலாம் ராஜேந்திர சோழன் மீது, ராஜராஜ சோழனின் 3-வது மனைவியான பஞ்சவன்மாதேவி அளவுக் கடந்த பாசத்துடன் இருந்தார். அதனால் தனக்குக் குழந்தை பிறந்தால், முதலாம் ராஜேந்திர சோழன் மீதுள்ள பாசம் போய்விடுமோ என்று தனக்கென பிள்ளை பெற்றுக் கொள்ளாமல் இருந்தார். இதனால், முதலாம் ராஜேந்திர சோழன், தனது தாயைவிட அதிகமான பாசத்தை பஞ்சவன்மாதேவி மேல் கொண்டிருந்தார். அதனால், அவரது நினைவாக அங்கு பஞ்சவன்மாதேவி பள்ளிப்படை மாதேஸ்வரம் எனும் கோயிலை நிறுவினார்.

இந்நிலையில், இன்று முதலாம் ராஜேந்திர சோழன் பிறந்த ஜென்ம நட்சத்திரமான ஆடி திருவாதிரை நட்சத்திரத்தையொட்டி, கும்பகோணம் வட்டார வரலாற்று ஆய்வு சங்கம் சார்பில் பஞ்சவன்மாதேவி பள்ளிப்படை கோயிலில் உள்ள மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து, முதுகலை வரலாறு படித்து வரும் கல்லூரி மாணவிகள், கோயிலை பார்வையிட்டு, அவரைப் பற்றிய குறிப்புகள் அடங்கிய கல்வெட்டுகளைப் படித்து பயிற்சி மேற்கொண்டனர். இதில், கும்பகோணம் வட்டார வரலாற்று ஆய்வு சங்க நிறுவனர் கோபிநாத், அரசு பெண்கள் கல்லூரி பேராசிரியர்கள் ரெஜினா மேரி, அகிலா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

x