மாமன்னன் ராஜேந்திர சோழன் பிறந்த நாள்... கங்கைகொண்ட சோழபுரத்தில் ஆடித் திருவாதிரை கொண்டாட்டம்!


அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில் வளாகத்தில் ராஜேந்திர சோழன் பிறந்தநாளான ஆடி திருவாதிரை விழா இன்று கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியை குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்த அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்.

அரியலூர்: அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில் வளாகத்தில் மாவட்ட நிர்வாகம், சுற்றுலாத்துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மாமன்னன் ராஜேந்திர சோழன் பிறந்த நாள் ஆடித் திருவாதிரை விழா இன்று (ஆக.02) நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு எம்எல்ஏ-க்கள் அரியலூர் கு.சின்னப்பா, ஜெயங்கொண்டம் க.சொ.க.கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆட்சியர் பொ.ரத்தினசாமி தலைமை வகித்தார். போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கிவைத்தார்.

அப்போது பேசிய அமைச்சர், ''இந்த மண்ணுக்கு பெருமை சேர்த்த ராஜேந்திர சோழனுக்கு விழா எடுப்பது பெருமைக்குரியது. திருவள்ளுவருக்கு சிலை, பூம்புகாரில் கோட்டம் போன்றது நம் மண்ணின் பெருமை. 1000 ஆண்டுகளுக்கு முன்பே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி போர் புரிந்தவர் ராஜேந்திர சோழன். அனைத்துக் கிராமங்களிலும் ஏரிகள் அமைக்க வழி வகுத்தவர் ராஜேந்திர சோழன். இந்தியாவிலேயே அதிக நிலபரப்பை ஆண்ட பெருமை ராஜேந்திர சோழனுக்கு உண்டு. அப்படி பெருமை வாய்ந்த மன்னருக்கு இத்தகைய விழாவைக் கொண்டாட முதல்வர் உத்தரவிட்டது பெருமைக்குரியது. இதனால் இப்பகுதி வரும் காலங்களில் பெரும் வளர்ச்சி அடையும்'' என்றார்.

தொடர்ந்து, பள்ளி மாணவ - மாணவியர் பங்குபெற்ற கலை நிகழ்ச்சிகள், நாட்டுப்புற கலைஞர்களின் தப்பாட்டம், பரத நாட்டியம், கிராமிய நடனம், கட்டைக்கால் ஆட்டம், சிலம்பாட்டம், கரகாட்டம், காவடி ஆட்டம், பட்டிமன்றம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவ - மாணவியருக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கப்பட்டன.

x