அரூர்: தருமபுரி மாவட்டம் அரூர் அருகே மலை கிராமத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபானக் கடையை அகற்றக்கோரி அப்பகுதி மக்கள் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அரூர் அருகே உள்ள மலை கிராமமான சித்தேரி ஊராட்சியில் 66 கிராமங்கள் உள்ளன. தாய் கிராமமான சித்தேரியில் டாஸ்மாக் மதுபானக் கடை இயங்கி வருகிறது. ஊரின் மையப் பகுதியில் உள்ள இந்தக் கடை, பொதுமக்கள், மற்றும் பெண்கள், பள்ளிக் குழந்தைகளுக்கு பெரும் இடையூறாகவும், அச்சுறுத்தலாகவும் உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் எனக்கோரி அப்பகுதி பொதுமக்கள் அரூர் - சித்தேரி சாலையில் இன்று மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த அரூர் கோட்டாட்சியர் வில்சன் ராஜசேகர், அரூர் டிஎஸ்பி-யான ஜெகநாதன் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அதில், ஒரு மாத காலத்திற்குள் டாஸ்மாக் கடையை அகற்றி ஒதுக்குப்புறமான வேறு இடத்திற்கு மாற்றித் தருவதாகவும், மதுபானக் கடை செயல்படும் நேரம் தவிர மற்ற நேரங்களில் , மதுவை பதுக்கி வைத்து விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், இது தவிர போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவார்கள் எனவும் அதிகாரிகள் அளித்த உறுதியின் பேரில் 2 மணி நேரத்திற்கு பின்பு, மக்கள் சாலை மறியலை கைவிட்டனர்.