ராமநாதபுரம்: பால் கெண்டை மீன் குஞ்சுகளை சேகரிக்க தற்காலிக தடை


பால் கெண்டை மீன்கள்.

ராமேசுவரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் பால் கெண்டை மீன் குஞ்சுகளை சேகரிப்பதற்கு மீன்வளத் துறை தற்காலிகமாக தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

ராமநாதபுரம், மன்னார் வளைகுடா மற்றும் பாக் நீரிணை கடல் பகுதிகளில் பால் கெண்டை மீன்கள் (பாலை மீன்) பரவலாக காணப்படுகின்றன. ஏப்ரல், மே, ஜூன் மாதங்கள் இந்த மீன்களின் இனப்பெருக்க காலம் ஆகும். இந்த காலத்தில் தான் மீன்பிடி தடைக் காலமும் அமலில் உள்ளது. பால் கெண்டை மீன் குஞ்சுகள் பண்ணைகளில் வளர்ப்பதற்காகவும், வணிகப் பயன்பாட்டுக்காகவும் ராமநாதபுரம் மாவட்ட கடலோர மீனவக் கிராமங்களில் அதிக அளவில் சேகரிக்கப்படுகின்றன.

இதனால் ராமநாதபுரம் மாவட்ட கடல் மீன்வளத்தில் பாதிப்பு ஏற்படு வதாக மீன்வளத் துறையினருக்கு புகார்கள் வந்தன. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்ட மீன் வளத்துறை சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: பால் கெண்டை மீன் குஞ்சு களை சேகரிப்பதால், பெரிய பால் கெண்டை மீன்கள் உற்பத்தி மற்றும் கடல் மீன்வளத்தில் ஏற்படும் விளைவுகள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப் பட உள்ளன.

அந்த ஆய்வின் அடிப்படையில் பால் கெண்டை மீன் குஞ்சுகளை சேகரிப்பது குறித்து உரிய வழிகாட்டு நெறிமுறைகளை மீன்வளத்துறை உருவாக்க உள்ளது. எனவே, வழிகாட்டு நெறி முறைகள் உருவாக்கப்படும்வரை ராமநாதபுரம் மாவட்டத்தில் பால் கெண்டை மீன் குஞ்சுகளை சேகரிக்கத் தடை விதிக்கப்படுகிறது. அதை மீறி அந்த மீன்குஞ்சுகளை பிடிப்பவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

x