மேலக்கோட்டையூரில் ரூ.17.43 கோடியில் காவலர் பொது மேல்நிலை பள்ளி கட்டிடம்: காணொலி வாயிலாக முதல்வர் திறந்து வைத்தார்


மேலக்கோட்டையூரில் காவலர் பொது மேல்நிலைப் பள்ளி கட்டிடத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று காணொலி வாயிலாக திறந்து வைத்தார். (உள் படம்) நிகழ்ச்சியில் மேலக்கோட்டையூர் ஊராட்சி மன்ற தலைவர் கவுதமி, காவல் உதவி ஆணையர் வெங்கடேசன் உள்ளிட்டோர் பங்கேற்று குத்து விளக்கேற்றி வைத்தனர். படங்கள்: எம்.முத்துகணேஷ்

மேலக்கோட்டையூர்: வண்டலூர் அருகே மேலக்கோட்டையூரில் செயல்படும் காவலர் பொதுமேல்நிலை பள்ளியில் ரூ. 17 கோடியே 43 லட்சத்து 50 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள கட்டிடத்தை முதல்வர் நேற்று காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.

செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் வட்டம், மேலக்கோட்டையூரில், மாநில அரசின் பாடத் திட்டத்தின் கீழ் காவலர் பொது மேல்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 1-ம் வகுப்பு முதல் 11-ம் வகுப்பு வரை மாணவர்கள் கல்வி கற்கின்றனர். 6-ம் வகுப்பு முதல் 11-ம் வகுப்பு வரை கல்வி பயிலும் மாணவர்களுக்காக ரூ. 17 கோடியே 43 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த புதிய கட்டிடத்தை தமிழக முதல்வர் நேற்று காணொலி வாயிலாக திறந்து வைத்தார். பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காவலர் பொது மேல்நிலை பள்ளிதலைமை ஆசிரியர் எம்.குணசேகரன், காவலர் பொதுப்பள்ளி தலைமை ஆசிரியர் குருநாதன், கேளம்பாக்கம் காவல் உதவி ஆணையர் வெ. வெங்கடேசன், காவலர் வீட்டு வசதி கழக உதவி செயற்பொறியாளர் ஜி. இந்திராணி, பட்டதாரி ஆசிரியர் ஜி. ரவிச்சந்திரன் பங்கேற்றனர்.

தற்போது இப்பள்ளி 1-ம் வகுப்பு முதல் 11-ம் வகுப்பு வரை ஆங்கில மற்றும் தமிழ் வழிகல்வி பிரிவில் 655 மாணவ மாணவிகள் கல்வி பயிற்று வருகின்றனர். 30 ஆசிரியர்கள் உள்ளனர். 8 ஏக்கர் பரப்பளவில் இந்தபள்ளி அமைந்துள்ளது. மேலும் இந்த பள்ளியில் நவீன ஸ்மார்ட் வகுப்பறைகள், கணினி ஆய்வகம், விளையாட்டு அரங்குகள் உள்ளன.விரைவில் விடுதியும் கட்டப்பட உள்ளது.

x