பிரதமர் நாற்காலி; முயற்சி திருவினையாக்குமா முத்துவேல் கருணாநிதியின் மகனுக்கு?


தேசிய தலைவர்களுடன் ஸ்டாலின்...

அண்மையில் கோவையில் திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் செந்தில்பாலாஜி திமுக தலைவர் ஸ்டாலினை, ‘வருங்கால இந்தியப் பிரதமரே’ என்று அழைத்தார். பெரும்பாலும் தமிழக அரசியலில், ‘வருங்கால முதல்வரே’ என்ற முழக்கம்தான் ஒலிக்கும். அப்படியான நிலையில் செந்தில்பாலாஜியின் வருங்காலப் பிரதமர் முழக்கம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

கருணாநிதி காலத்திலேயே தேசிய அரசியலில் திமுக முக்கிய பங்காற்றி இருக்கிறது. சில நேரங்களில், யார் பிரதமர் என்பதை தீர்மானிக்கும் இடத்தில் கருணாநிதி இருந்ததும் உண்டு. ஆனால், அதுபோன்ற நேரங்களில்கூட தன்னை பிரதமர் வேட்பாளராக கருணாநிதி முன்னிறுத்திக் கொண்டதில்லை. “என் உயரம் எனக்குத் தெரியும்” என்று தான் அவர் அதுபோன்ற சமயங்களில் பதில் அளித்திருக்கிறார். ஆனால், “நான் இப்போது தேசிய அரசியலில்தான் இருக்கிறேன்” என்று முதல்வர் ஸ்டாலின் பதிலளித்திருப்பதும், வருங்காலப் பிரதமர் என்று அவர் விளிக்கப்படுவதும் திமுக மற்றும் அதன் தலைவரின் உள்விருப்பம் என்னவாக இருக்கிறது என்பதையே வெளிக்காட்டுகிறது.

ஆனால், தேசிய அளவில் அதற்கான சூழல் ஏற்பட்டிருக்கிறதா... தற்போதைய சூழலில் தேசிய அரசியலில் திமுகவின் பங்கு என்னவாக இருக்கிறது என்ற கேள்விகள் எழும் நிலையில், திமுகவின் முன்னெடுப்பு என்பது தற்போது மிக அவசியமான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. மத்தியில் அசுர பலத்துடன் ஆளும் பாஜகவை எதிர்க்கும் அளவுக்கு காங்கிரஸ் கட்சிக்கு வலுவில்லை. அதனால் பிராந்திய அளவில் வலுவான பாஜக எதிர்ப்பு மனநிலையில் இருக்கும் கட்சிகளை பாஜகவுக்கு எதிராக அணி திரட்ட வேண்டிய கட்டாயம் காங்கிரஸுக்கு இருக்கிறது.

சமூகநீதி பாதுகாப்பு மாநாடு

ஆனால், அத்தகைய கூட்டணியை கட்டமைக்க விரும்பும் மம்தா, சந்திரசேகர்ராவ் போன்றவர்கள் காங்கிரஸை ஏற்கத் தயங்குகிறார்கள். ஆனால், காங்கிரஸ் அல்லாத கூட்டணி உருவாக்கப்பட்டால் அது மூன்றாவது அணியாக மட்டுமே அமையும். மீண்டும் அது பாஜகவுக்கே சாதகமான நிலையை உருவாக்கும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

இதை உணர்ந்தே எதிர்க்கட்சிகளை அணி திரட்டும் வேலையை திமுக முன்னெடுத்துப் பார்க்கிறது. கடந்த மக்களவைத் தேர்தலின்போதே இதற்கான அடித்தளத்தை அமைக்க திமுக முயன்றது. ஆனால், ‘ராகுல் காந்தி தான் பிரதமர் வேட்பாளர்’ என்ற ஸ்டாலினின் பிரகடனத்தால் அப்போது அந்த முயற்சி கைகூடாமல் போனது. இதனால் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க முடியாமல் போய் மீண்டும் பாஜகவே ஆட்சிக்கு வரும் சூழல் இயல்பாகவே அமைந்து போனது.

தங்களுக்குள் போட்டி போட்டுக் கொண்டு பாஜகவை மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமரவைத்ததன் பலனை கடந்த நான்காண்டு காலத்தில் நன்றாகவே அனுபவித்துவிட்டோம் என்பதை எதிர்க்கட்சிகள் இப்போது உணர ஆரம்பித்திருக்கின்றன. புலனாய்வு அமைப்புகளை வைத்து பாஜக அரசு கொடுக்கும் தொடர் நெருக்கடிகள் அர்விந்த் கேஜ்ரிவால், சந்திரசேகர்ராவ், மம்தா, நிதிஷ்குமார் உள்ளிட்டோரை மாற்றி யோசிக்க வைத்திருக்கிறது. எப்பாடு பட்டாவது இம்முறை பாஜகவுக்கு எதிரான கட்சிகளை ஓரணியில் திரட்ட வேண்டும் என இவர்கள் எல்லோருமே மெனக்கிடுகிறார்கள். அதன் பிரதிபலிப்புத்தான் ராகுல் தகுதி இழப்பு விவகாரத்தில் இவர்கள் எல்லாம் ஒருமித்த குரலாய் எதிர்ப்பைக் காட்டியது!

காங்கிரஸும் இப்போது சூழலுக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொண்டிருக்கிறது. “பிரதமர் வேட்பாளர் யார் என்ற கேள்வி எல்லாம் இப்போது எழவில்லை” என்று ப.சிதம்பரம் போன்றவர்களே மாற்றிப் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். சோனியா குடும்பத்தை முன்னிறுத்துவதை சில கட்சிகள் விரும்பவில்லை என்பதைப் புரிந்துகொண்டு இப்போது மல்லிகார்ஜுன கார்கேயை முன்னிறுத்துகிறது காங்கிரஸ். ஆக, அடுத்து வரும் மக்களவைத் தேர்தலில் யார் பிரதமராக வரவேண்டும் என்பதைவிட யார் வந்துவிடக்கூடாது என்பதில் காங்கிரஸ் கட்சியும் இப்போது கவனமாகவே தனது அடிகளை எடுத்து வைக்கிறது. இதைப் புரிந்துகொண்டு தான் திமுகவும் பிரதமர் கனவுடன் சிலபல வேலைகளைச் செய்யத் தொடங்கி இருக்கிறது.

ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில் தேசிய தலைவர்கள்

தேசிய அளவில் பாஜகவுக்கு எதிரான கூட்டணி என்பது வெகுநாளாகப் பேசப்பட்டு வந்தாலும் மார்ச் முதல் தேதி நடந்த முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள்விழா பொதுக்கூட்டத்தில் தான் வெளிப்படையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தக் கூட்டத்தில் காஷ்மீரின் தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், பீகார் துணை முதல்வரான ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தேஜஸ்வி யாதவ், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட பல தலைவர்கள் பங்கேற்றனர்.

இதுமுடிந்து ஒருமாத இடைவெளியில் தற்போது சமூகநீதிக்கான அகில இந்திய மாநாட்டை ஏப்ரல் 3-ல் நடத்தி முடித்திருக்கிறது திமுக. ’சமூகநீதிப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லுதல்’ என்ற பெயரில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் திமுக சார்பில் தேசிய அளவிலான கருத்தரங்கம் ஒன்று டெல்லியில் நடத்தப்பட்டது. அதை மேலும் வலுப்படுத்தி தற்போது அகில இந்திய மாநாட்டை நடத்தி இந்திய அளவிலான முக்கிய அரசியல் தலைவர்களை அதில் பங்குபெற வைத்திருக்கிறது திமுக.

இந்த மாநாட்டில் பேசிய ஸ்டாலின், “இந்தியா முழுமைக்கும் கூட்டாட்சி, மாநில சுயாட்சியை நிலைநாட்ட நாம் குரல்கொடுக்க வேண்டும். அது தனித்தனியாக இல்லாமல் கூட்டுக்குரலாக, கூட்டணிக் குரலாக அமைய வேண்டும்” என்று ஓங்கி ஒலித்திருக்கிறார்.

ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக அனைத்துத் கட்சித் தலைவர்களையும் அழைத்து தேசிய அளவிலான கூட்டணி அமைய வேண்டியதன் முக்கியத்துவத்தை உணர்த்தி இருக்கிறார் ஸ்டாலின். அடுத்தகட்டமாக கருணாநிதி நூற்றாண்டு விழாவையும் இதற்காகப் பயன்படுத்தத் தயராகிவிட்டார். தேசியத் தலைவர்களை திருவாரூருக்கு அழைத்துவந்து பிரம்மாண்ட மாநாட்டை நடத்தத் திட்டமிட்டிருக்கிறார் ஸ்டாலின்.

ராகுல்காந்தியுடன் ஸ்டாலின்

திமுகவின் இந்த முயற்சிகள் பாஜகவுக்கு எதிரான தேசிய அளவிலான வலுவான கூட்டணி என்பதை நோக்கியதான பயணம் என்றாலும் இதன் பின்னால் ஸ்டாலினின் பிரதமர் கனவும் இருக்கிறது என்கிறார்கள். தற்போது உருப்பெறும் இந்த கூட்டணி அமைந்து எதிர்க்கட்சிகள் கணிசமான இடங்களை வென்று கூட்டணி ஆட்சியமைக்க முற்பட்டால் அப்போது காங்கிரசை ஏற்க பல கட்சிகள் தயங்கலாம். உதாரணமாக, தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, திரிணமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி போன்றவை காங்கிரசை நிச்சயம் ஏற்காது.

மம்தாவுக்கும், சந்திரசேகர்ராவுக்கும்கூட எதிர்ப்புக் கிளம்பும். தற்போது தகுதி இழப்பு வழக்கிலிருந்து தற்காலிகமாக மீண்டிருக்கும் ராகுலுக்கு இந்த வழக்கின் இறுதி முடிவு அவருக்கு பாதகமாக அமைந்தால் அவர் பிரதமர் ரேஸிலேயே இருக்க மாட்டார். அப்படியான சூழல் அமையும் போது அனைத்துக் கட்சிகளுக்கும் நட்பாக இருக்கும் ஒருவர்தான் பிரதமர் ஆக முடியும். அந்த ஒருவராக, ஸ்டாலின் இருக்க வேண்டும் என்பதே திமுகவின் கணக்காக இருக்கிறது.

திமுகவின் இந்த முன்னெடுப்புக்கள் குறித்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் பேசினோம். ‘’மாநிலத்தில் மட்டுமல்லாது இந்தியா முழுமைக்கும் சமூகநீதியைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக திமுக களமிறங்கியுள்ளது. அதற்காக மட்டும்தான் சமூகநீதி பாதுகாப்பு மாநாடு நடத்தினோம். அதன் பின்னால் அரசியல் காரணங்கள் ஏதுமில்லை. பிஜேபிக்கு மாற்றான கூட்டணி அமைப்பதற்காக நாங்கள் மாநாடு, கூட்டம் நடத்தவில்லை. அவை அந்தந்த காலகட்டத்தில் தேவை கருதி நடத்தப்படுபவைதான்.

ஆர்.எஸ்.பாரதி

எனினும் பாஜகவுக்கு எதிரான கூட்டணி அமைக்கும் வேலைகள் ஒருபக்கம் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றாக இணையவேண்டும் என்பது திமுகவின் விருப்பமாக இருக்கிறது. அதை விரும்பும் ஒத்த கருத்துடைய கடசிகளுடன் இணைந்து செயல்படவே திமுக விரும்புகிறது.

இதை வைத்துக்கொண்டு ஸ்டாலினை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்த திமுக திட்டம் வகுக்கிறது என்று சொல்வது தவறு. அப்படி எந்தத் திட்டமும் கிடையாது என எங்கள் தலைவரே சொல்லிவிட்டார். ‘அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும், யார் பிரதமராக வரவேண்டும் என்பதை இப்போது தீர்மானிக்க வேண்டாம். யார் வரக்கூடாது என்பதுதான் அனைவரின் நோக்கமாக இருக்கவேண்டும். அதற்காகத்தான் எல்லோரும் ஒன்றிணைய வேண்டும்’ என்று அவர் தெளிவாக சொல்லியிருக்கிறார். எனவே, மத்தியில் யார் வரக்கூடாது என்று நினைக்கிறோமோ அதை செயல்படுத்த, அதற்கான செயல்திட்டத்தோடு உறுதியோடு திமுக பயணிக்கும்” என்றார் பாரதி.

சமூகநீதி என்ற பெயரில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் திமுக இறங்கி இருப்பது பாஜகவையும் பதற்றப்பட வைத்திருக்கிறது. அதனால் தான், “சமூக நீதி பேசும் திமுகவுக்கு கருணாநிதி குடும்பத்தைச் சேர்ந்தவர்களைத் தவிர வேறு யாராவது தலைவராக வரமுடியுமா... பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவரை துணை முதல்வராக்குவீர்களா?” என்றெல்லாம் வானதி சீனிவாசன் போன்றவர்கள் அறிக்கைவிட ஆரம்பித்திருக்கிறார்கள்.

அதேசமயம், காங்கிரஸுடன் இணக்கமாக இருக்கும் ஸ்டாலினை... ராகுல் காந்தி தான் பிரதமர் வேட்பாளர் என்று கடந்த முறை பிரகடனம் செய்த ஸ்டாலினை மம்தா, சந்திரசேகர்ராவ் போன்றவர்கள் எந்தளவுக்கு நம்புவார்கள், ஆதரிப்பார்கள் என்பதும் கேள்விக்குறிதான். ஏனென்றால், இவர்களும் பிரதமர் கனவில் இருப்பவர்கள். எனினும் எதையும் சாதிக்கலாம் என்ற நம்பிக்கையோடு எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சிகளை முழுமூச்சுடன் முன்னெடுக்கிறது திமுக.

முத்துவேல் கருணாநிதியின் மகனுக்கு முயற்சி திருவினை ஆக்குகிறதா என்பதைப் பார்க்கலாம்!

x