இலவச வேட்டி சேலை திட்டத்தில் ஊழல்: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு


சென்னை: இலவச வேட்டி சேலை திட்டத்தில் திமுக ஊழல் செய்கிறது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டி உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக மக்களுக்கு பொங்கல் தொகுப்பில் இலவச வேட்டி சேலை வழங்கும் திட்டம், மறைந்தமுன்னாள் முதல்வர் எம்ஜிஆர்ஆட்சியின்போது கொண்டு வரப்பட்டது. விசைத்தறி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த கொண்டு வரப்பட்ட இந்த திட்டத்தின் மூலம், திருச்செங்கோடு, ஈரோடு, திருப்பூர் மற்றும் கோவை சரக விசைத்தறி கூட்டுறவுச் சங்க நெசவாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பல லட்சம் பேர் ஆண்டுதோறும் பயனடைந்து வருகின்றனர்.

ஆனால், திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து, இலவச வேட்டி சேலை திட்டத்தில் ஊழல் மற்றும் உற்பத்தியாளர்களிடம் கமிஷன் என முறைகேடுகள் பெருக ஆரம்பித்ததோடு, நூல் கொள்முதலில் காரணமில்லாத காலதாமதமும் ஏற்படத் தொடங்கியது. கடந்த 3 ஆண்டுகளாக, ஜூன் மாதத்தில் நடைபெற வேண்டிய கொள்முதல் பணிகள், அக்டோபர் மாதம் வரை தள்ளிப்போனதும், இதனால் பொதுமக்களுக்கு, பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்பட வேண்டிய வேட்டி, சேலை,பிப்ரவரி மாதம் வரை தள்ளிப்போனதையும் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

கொள்முதலை தொடங்கவில்லை: குறிப்பாக, இந்த திட்டத்தில், கைத்தறித் துறை அமைச்சர் காந்தி செய்த ஊழல் குறித்து, லஞ்ச ஒழிப்புத் துறையில், தமிழக பாஜக சார்பில் புகாரும் அளிக்கப்பட்டுள்ளது. அதுபோக, இலவச வேட்டி சேலை உற்பத்தி செய்யும் விசைத்தறியாளர்களிடம், 10 சதவீதம் கமிஷன் வாங்குவதும் திமுக ஆட்சியில் நடந்து கொண்டிருக்கிறது. கடந்த 3 ஆண்டுகளைத் தொடர்ந்து, இந்த ஆண்டும் திமுக நூல் கொள்முதல் பணிகளை இன்னும் தொடங்கவில்லை. இதனால், விசைத்தறியாளர்கள் வேலைவாய்ப்பின்றி தவிக்கிறார்கள்.

இலவச வேட்டி சேலை நூல் கொள்முதல் ஒப்பந்தத்துக்கான அரசாணை, வெகு தாமதமாக, 2023-ம் ஆண்டு ஜூலை 13-ம் தேதி தான் வெளியிடப்பட்டது. இந்த ஆண்டோ, நூல் கொள்முதல் ஒப்பந்தத்துக்கான அரசாணை, இதுவரை வெளியிடப்படவில்லை. விசைத்தறியாளர்கள் நலனுக்காகக் கொண்டு வரப்பட்ட இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டம்,தற்போது திமுக ஆட்சியில், ஊழல் செய்வதற்காகவும், கமிஷன்வாங்குவதற்காகவும் மட்டுமே பயன்படுத்தப்படுவது மிகுந்த கண்டனத்துக்குரியது. எனவே, உடனடியாக, இலவச வேட்டி சேலைக்கான நூல் கொள்முதல் ஒப்பந்தப் பணிகளை தொடங்கி, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள விசைத்தறியாளர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

x