சென்னை: வரலாறு காணாத பேரழிவால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்துக்கு எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தின் சார்பில், ரூ.1 கோடி நிவாரண நிதி வழங்கப்பட உள்ளதாக இந்திய ஜனநாயகக் கட்சி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, இந்திய ஜனநாயகக் கட்சி (ஐஜேகே) தலைமையகம் நேற்று வெளியிட்ட அறிக்கை: கேரள மாநிலம், வயநாடு பகுதி நிலச்சரிவில் பலர் வாழ்வாதாரங்களை இழந்துள்ளனர். எழில் சூழ்ந்த வயநாடு, வரலாறு காணாத பேரழிவைச் சந்தித்திருப்பது மிகுந்தமனவேதனையை அளிக்கிறது.
போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகள் துரிதமாக நடைபெற்று வந்தாலும், பேரழிவைச் சந்தித்துள்ள கேரள மாநிலத்துக்குத் தேவையான நிதியுதவி மற்றும் நிவாரண உதவிகளை மத்திய அரசுஉடனடியாக வழங்க வேண்டும்.
கேரள மாநிலம் வயநாடு பகுதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வதற்காக, இன்று (ஆக.2) எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் சார்பில், இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனரும், எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வேந்தருமான பாரிவேந்தர் மற்றும் கட்சியின் தலைவரும், எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக இணை வேந்தருமான ரவிபச்சமுத்து ஆகியோர் கேரளா செல்கின்றனர். அங்கு அந்த மாநில முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து, நிவாரண நிதியாக ரூ.1 கோடி வழங்கப்படவுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நிவாரணப் பணிகளுக்காக நடிகர்கள் சூர்யா, கார்த்தி மற்றும் நடிகை ஜோதிகா ஆகியோர் இணைந்து ரூ.50 லட்சத்தை கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளனர். மேலும், நிலச்சரிவில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தாருக்கும் தங்களது ஆழந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.
வயநாடு நிலச்சரிவு பாதிப்புக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ரூ.25 லட்சம் நிவாரணம் அளித்துள்ளார்.
இது தொடர்பாக அக்கட்சித் தலைமையகம் வெளியிட்ட அறிக்கையில், "வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களின் துயர்துடைக்க மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் ரூ.25 லட்சத்தை கேரள முதல்வரின் பேரிடர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.