பாரம்பரியம், கலாச்சாரத்தை போற்றும் மாமதுரை விழா: ஆகஸ்ட் 8-ம் தேதி தொடக்கம்


மதுரை: மதுரையில் வரும் 8-ம் தேதி மாமதுரை விழா கோலாகலமாகத் தொடங்குகிறது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக தொடங்கிவைக்கிறார்.

மதுரை மாநகரின் பாரம்பரியம், கலாச்சாரத்தைப் போற்றும் வகையில் ‘மாமதுரை விழா’ வரும் 8-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை நடைபெறுகிறது.

மதுரை மாநகராட்சியின் மேற்பார்வையில் ‘யங் இந்தியன்ஸ்’ அமைப்பு விழாவுக்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. தொடக்கநிகழ்ச்சி மதுரை தமுக்கம் மைதானத்தில் ஆக.8-ம் தேதி காலை நடைபெறுகிறது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், காணொலி வாயிலாக விழாவைத் தொடங்கி வைக்கிறார்.

ஏற்பாடுகளை மதுரை எம்.பி.யும், மாமதுரை விழா அமைப்பின் தலைமை வழிகாட்டியுமான சு.வெங்கடேசன், மதுரை சிஐஐ யங் இந்தியன்ஸ் தலைவர் பைசல்அகமது, விழா ஒருங்கிணைப்பாளர் விக்ராந்த் கார்மேகம் ஆகியோர் இணைந்து செய்துவருகின்றனர்.

மதுரை நகரில் தமுக்கம், லட்சுமி சுந்தரம் ஹால், மகாத்மா பள்ளி, வண்டியூர் லேக், மடீட்சியா அரங்கம், வைகை கரை பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் மக்களும், மாணவர்களும் பங்கேற்கும் விளையாட்டுகள், கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

மேலும், சுற்றுலாவை மேம்படுத்த பட்டம் விடும் திருவிழா, அடுக்குமாடி பேருந்துப் பயணம், பாரம்பரிய நடைபயணம், மதுரை ரன்ஸ், சைக்கிளிங், உணவுத் திருவிழா, வியாபார சந்திப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

விழாவின் தொடக்கமாக மதுரை நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ளபொது சுவர்களில் சுமார் 1 லட்சம்சதுர அடி அளவில் வண்ணமயமான அழகிய ஓவியங்கள் வரையப்பட்டு வருகின்றன

x