திருச்சி கொள்ளிடத்தில் வெள்ளப் பெருக்கு: கட்டி முடிக்கப்பட்ட 6 மாதங்களுக்குள் இடிந்து விழுந்த ஆற்றின் தடுப்பு சுவர்


கொள்ளிடம் ஆற்றின் புதிய பாலத்தின் அருகே கட்டப்பட்ட தடுப்புச் சுவரின் ஒரு பகுதி இடிந்ததால், அதிக அளவில் வெளியேறும் தண்ணீர். படம்: ர.செல்வமுத்துகுமார்

திருச்சி: திருச்சி கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக தடுப்புச் சுவரின் ஒரு பகுதி இடிந்து அடித்துச் செல்லப்பட்டது. தடுப்புச் சுவர் கட்டி முடிக்கப்பட்டு 6 மாதங்களிலேயே இடிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொள்ளிடம் ஆற்றில் 2018-ல் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பழைய பாலம் இடிந்தது. தொடர்ந்து, அந்தப் பாலம் அகற்றப்பட்டு, அருகில் புதிய பாலம் கட்டப்பட்டது. ஆனால், அதன் கீழ்பகுதியில் மணல் அரிப்பு ஏற்பட்டதால்,ரூ.6.5 கோடியில், ஆற்றின் குறுக்கே6 மீட்டர் உயரத்துக்கு கான்கிரீட்தடுப்புச் சுவர் கட்டப்பட்டு, கடந்தபிப்ரவரி மாதம் பணிகள் முடிவடைந்தன.

இந்நிலையில், முக்கொம்பு மேலணையில் இருந்து காவிரியில் நேற்று 35 ஆயிரம் கனஅடியும், கொள்ளிடம் ஆற்றில் 65 ஆயிரம் கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டது. கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் புதிய பாலத்துக்கு அருகே கட்டப்பட்டிருந்த தடுப்புச் சுவரில் ஒரு பகுதி நேற்று முன்தினம் நள்ளிரவில் இடிந்து விழுந்தது. தடுப்புச் சுவருக்கும் மேல் தண்ணீர் செல்வதால், எவ்வளவு நீளம் தடுப்புச் சுவர் இடிந்தது என்றுதெரியவில்லை. கட்டி முடிக்கப்பட்ட 6 மாதங்களில் தடுப்புச் சுவர்இடிந்து விழுந்த சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது.

நீரோட்டத்தின் போக்கு... இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறை பொறியாளர்களிடம் கேட்டபோது, "கொள்ளிடம் ஆற்றில் 2018 வெள்ளத்தின்போது 18, 19,20, 21 ஆகிய தூண்களுக்கு இடையேதான் நீரோட்டம் அதிகமாக இருந்தது. தற்போது நீரோட்டத்தின் போக்கு மாறி 22, 23 ஆகிய தூண்களுக்கு இடையே தண்ணீர் செல்வதால் தான், தடுப்புச் சுவர்30 மீட்டர் அளவுக்கு உள்வாங்கியுள்ளது. மேலும், தடுப்புச் சுவருக்குமுன்பகுதியில் மண் சேருவதற்குள்ளாக வெள்ளம் வந்துவிட்டதால், சுவரில் தண்ணீர் நேரடியாகமோதி, பாதிப்பை ஏற்படுத்திஉள்ளது" என்றனர்.

உயர் மின்னழுத்த கோபுரம்: இதனிடையே, கொள்ளிடம் ஆற்றில் தடுப்புச்சுவர் உடைந்த இடத்தின் அருகில் செல்லும் உயர் மின்னழுத்த கோபுரமும் நேற்று அதிகாலை முதல் சரியத் தொடங்கியது. இதையடுத்து, அந்த வழித்தடத்தில் மின்சாரம் தடை செய்யப்பட்டது. மின் கோபுரம் மேலும் சரியாமல் இருக்க, கம்பி மூலம் இழுத்துக் கட்டும் முயற்சியில் மின்வாரிய பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்

x