உதகை: நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக மலை ரயில் பாதையில் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால், உதகை-மேட்டுப்பாளையம் இடையேயான மலை ரயில் சேவை வருகிற 3ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து இடைவிடாமல் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் லேசான மண்சரிவுகள் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டு வருகிறது. இதையடுத்து அசம்பாவிதங்கள் ஏற்படாத வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கடந்த ஒரு வார காலத்திற்கும் மேலாக பெய்து வரும் தொடர்மழை காரணமாக உதகை-மேட்டுப்பாளையம் இடையேயான மலை ரயில் பாதையில் பல்வேறு இடங்களில் மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளது. இதனை சீர் செய்யும் பணியில் ரயில்வே ஊழியர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர். இதனிடையே இன்று சீரமைப்புப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, பல்வேறு இடங்களில் அடுத்தடுத்து மண் சரிவு ஏற்பட்டு ரயில் பாதை சேதமடைந்துள்ளது.
இதையடுத்து இதனை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக வருகிற 3ம் தேதி வரை உதகை-மேட்டுப்பாளையம் இடையேயான மலை ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. ஏற்கெனவே முன்பதிவு செய்துள்ள சுற்றுலாப் பயணிகளுக்கு மொத்த பணமும் திரும்ப வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.