முகலாயர்களின் முக்கியச் சின்னங்களான குதுப்மினார், தாஜ்மகாலை இடித்து கோயில்கள் கட்ட வலியுறுத்தப்பட்டு உள்ளது. இதை குறிப்பிட்டு பிரதமர் நரேந்திரமோடிக்கு அசாமின் பாஜக எம்எல்ஏ ரூப் ஜோதி குர்மி கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக அசாம் பாஜகவின் முக்கியத் தலைவரான குர்மி, பிரதமர் நரேந்திரமோடிக்கு எழுதியக் கடிதத்தில், ‘தாஜ்மஹால் மற்றும் குதுப்மினாரை உடனடியாக இடித்து தள்ள வேண்டும் என பிரதமரிடம் கேட்டுக் கொள்கிறேன். இந்த இடங்களில் உலகின் சிறந்தவகையிலான அழகைக் கொண்ட கோயில்களைக் கட்ட வேண்டும். இதன் கட்டமைப்புகளை போல், உலகில் எங்குமே எந்தவிதமான கோயில்களும், சின்னங்களும் இருக்காத அளவில் அமைய வேண்டும். இந்த கோயில்களைக் கட்ட னது எம்எல்ஏவின் ஒன்றரை வருடத்திற்கான மாதச் சம்பளத்தை நன்கொடையாக அளிக்கவும் தயாராக உள்ளேன் ’ எனத் தெரிவித்துள்ளார்.
சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்கு புகழ்பெற்றவரான குர்மி, அசாம் மாநிலம், ஜோர்ஹாட் மாவட்டத்தில் உள்ள மரியானி தொகுதி எம்எல்ஏவாக உள்ளார்.
நான்காவது முறையாக எம்எல்ஏவாக இருக்கும் குர்மி, காங்கிரஸ் கட்சியில் மூன்றுமுறை வென்றவர். இதன் பிறகு கடந்த 2021-ம் ஆண்டு பாஜகவில் இணைந்து சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு அதே மரியானி தொகுதியில் எம்எல்ஏவாகி உள்ளார். இவரது தாயான ரூபம் குர்மி, காங்கிரஸ் ஆட்சியில் அமைச்சராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.