ஸ்ரீவில்லிபுத்தூர் காய்கறி சந்தையில் 9 கடைகள் மீன் சந்தைக்கு ஒதுக்கீடு: பக்தர்கள் அதிருப்தி


ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் தெப்பம் அருகே புதிதாக கட்டப்பட்ட காய்கறி சந்தையில் மீன் சந்தை அமைக்க அப்பகுதி மக்கள் மற்றும் பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், 9 கடைகள் மீன் சந்தைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு சொந்தமான சர்க்கரைக்குளம் தெப்பம் அருகே நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1.14 கோடி மதிப்பில் 24 கடைகளுடன் புதிய காய்கறி சந்தை கட்டப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதம் முதல்வர் காணொளி வாயிலாக திறந்து வைத்த நிலையில், காய்கறி சந்தையில் மீன் சந்தை அமைக்க நகராட்சி சார்பில் ஒப்பந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

கோயில் தெப்பம், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், அம்மா உணவகம் மற்றும் கோயில் அருகே மீன் சந்தை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் நகராட்சி தலைவரிடம் நேரில் கோரிக்கை மனு அளித்தனர். ஆண்டாள் கோயில் தெப்பம் அருகே மீன் சந்தை அமைப்பதற்கு பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் 24 கடைகளை கொண்ட காய்கறி சந்தையில், 9 கடைகள் மீன் சந்தை அமைக்க ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது. இது பொதுமக்கள் மற்றும் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கூறுகையில்: "ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையம் அருகே தற்போது காய்கறி சந்தையாக செயல்பட்டு வரும் தனியார் வணிக வளாக கட்டடம் சேதமடைந்தது இருப்பதாலும், நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாலும் புதிய காய்கறி சந்தை அமைக்கப்பட்டது. ஆனால் தற்போது காய்கறி கடை வைத்திருப்பவர்கள் புதிய சந்தைக்கு வர மறுப்பதாக கூறி, அதிகாரிகள் மீன் சந்தை அமைக்க கடைகளை ஒதுக்கீடு செய்துள்ளனர்.

மீன் சந்தை திறக்கப்பட்டால் மீதமுள்ள கடைகளுக்கு யாரும் வரமாட்டார்கள். மேலும் ஆண்டாள் கோயில் தெப்பம் முன் மீன் சந்தை அமைப்பது லட்சக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கையை அவமதிக்கும் செயல். எனவே இந்த விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் தலையிட்டு, மீன் சந்தையை இடமாற்றம் செய்ய உத்தரவிட வேண்டும்" என்று பக்தர்கள் கூறியுள்ளனர்.

x