மதுரை: நீட் தேர்வில் அரசு மருத்துவர்கள் கோட்டா தொடர்பான அரசாணையை தமிழக அரசு ரத்து செய்ததை தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் வரவேற்றுள்ளது.
இது தொடர்பாக அச்சங்கத்தின் தலைவர் டாக்டர் செந்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: "தமிழக அரசு கடந்த ஜூலை 1ம் தேதி ஒரு அரசாணை வெளியிட்டிருந்தது. அதன்படி, அரசு கோட்டா சில பட்ட மருத்துவ மேற்படிப்பு பிரிவுகளுக்கு கிடையாது என்று தெரிவித்து இருந்தது. அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீதம் அரசு கோட்டா என்பது அவர்களது உரிமை. இந்த கோட்டாவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்த போது அதனை எதிர்த்து சிங்கிள் பெஞ்ச், டிவிஷன் பெஞ்ச் போன்றவற்றில் தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் சட்டரீதியாக வாதாடியது.
டிவிஷன் பெஞ்சில் இரு நீதிபதிகள் மாறுபட்ட கருத்துகளை தெரிவித்ததால் மூன்றாம் நீபதிக்கு வழக்கு அனுப்பப்பட்டு அவர் அரசு மருத்துவர்களுக்கான கோட்டா மத்திய அரசு கொண்டு வந்த நீட், பட்டமேற்படிப்பு சட்டத்தின்படி செல்லாது என்று தீர்ப்பளித்தார். இந்த வழக்கை தமிழக அரசிடம் வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்திற்கு கொண்டு சென்று இரண்டு நீதிபதிகள் பெஞ்ச் விவாதித்து பின்பு 5 நீதிபதிகள் கொண்ட கான்ஸ்டிடியூஷனல் பெஞ்சிற்கு கொண்டு சென்று, சிறப்பு வழக்கறிஞர்களை தமிழக அரசின் மூலம் நியமித்து வாதாடி போராடி வென்றெடுத்த கோட்டா இந்த 50 சதவீதம் அரசு மருத்துவர்களுக்கான கோட்டா.
இதுதவிர மாவட்ட தலைநகரங்கள் தோறும் அரசு கோட்டாவை ரத்து செய்யக்கூடாது. இதற்கான சட்ட நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி சுமார் 21 நாட்கள் தொடர் போராட்டம் தமிழக அரசு மருத்துவர்கள் சங்கம் நடத்தியது. இந்த சட்டம் மற்றும் உரிமைப் போராட்டத்திற்கு பிறகு இந்த 50 சதவீதம் கோட்டாவை திரும்பப்பெற முடிந்தது.
தமிழக அரசின் ஜூலை 1ம் தேதி அரசாணை, அரசு கோட்டாவுக்கு எதிராக இல்லாவிட்டாலும் அரசு மருத்துவர்களுக்கு உரிய 750 சீட்டுக்கு பதிலாக 500 சீட்டு கிடைக்கும் நிலை உண்டானது. இதுபற்றி அந்த அரசாணை விவரிக்கவில்லை. அரசு மருத்துவர்களுக்குரிய 750 சீட்டுகளை குறைக்காமல் கொடுக்க வேண்டும் அல்லது இந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக அரசு மருத்துவர்கள் சங்கம் கோரிக்கை வைத்தது.
சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் இந்த பிரச்சினையை கொண்டு சேர்த்தவுடன் அதைக்கேட்ட அவர் அப்போதே, இந்த அரசாணை ரத்து செய்யப்படும் என உறுதியளித்தார். அதனை உடனடியாக நடைமுறைப்படுத்தி ஜூலை 25 அன்று அரசாணை 181 வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, பிரச்சினைக்குரிய அந்த அரசாணை ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதற்காக அரசு மருத்துவர்களின் உரிமையை பாதுகாத்த முதல்வர் ஸ்டாலின், அதனை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் சுகாதாரத்துறை செயலருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்." என்று டாக்டர் செந்தில் கூறினார்.