மத்திய பட்ஜெட்டுக்கு கண்டனம்: ராமேஸ்வரத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள் தனித்தனியாக போராட்டம்


ராமேசுவரம் தபால் நிலையம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக நடைபெற்ற சாலை மறியல்

ராமேஸ்வரம்: மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு பாரபட்சத்தை கண்டித்து ராமேஸ்வரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் தனித்தனியாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத பட்ஜெட்டையும், தமிழக விரோதப் போக்கையும் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) லிபரேசன் ஆகிய இடதுசாரி கட்சிகளின் சார்பில் 2024 ஆகஸ்ட் 1ம் தேதி அன்று தமிழகம் முழுவதும் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனடிப்படையில் ராமேஸ்வரம் தபால் நிலையம் முன்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பாக சாலை மறியல் நடைபெற்றது. இந்த சாலை மறியலுக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் கருணாகரன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் சிவா, ஜஸ்டின், ஆரோக்கிய நிர்மலா, அசோக், மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த சாலை மறியலில் 66 பெண்கள் உள்பட 138 பேர் கைது செய்யப்பட்டனர்.

ராமேசுவரம் திட்டக்குடி சந்திப்பு முன்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக நடைபெற்ற சாலை மறியல் போராட்டம்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக தபால் நிலையம் அருகில் சாலை மறியல் நடைபெற்றது. இந்த சாலை மறியல் போராட்டத்திற்கு நகரச் செயலாளர் செந்தில்வேல் தலைமை வகித்தார். முனீஸ்வரன், ஜோதிபாசு, அந்தோணி பீட்டர், முகவை முனிஸ், பூமாரி லெட்சுமி, பார்வதி, சாந்தி, சிகப்பியம்மாள் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இந்தச் சாலை மறியலில் 23 பெண்கள் உள்பட 36 பேர் கைது செய்யப்பட்னர்.

மேலும் ராமேஸ்வரம் திட்டக்குடி சந்திப்பில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் முருகானந்தம் தலைமை வகித்தார். போராட்டத்தில் நிர்வாகிகள் நந்தகிருஷ்ணன், அய்யன்தாஸ், இன்னாசிமுத்து, கணேசன் மூர்த்தி, நாகசாமி உள்பட சுமார் 20பேர் கைது செய்யப்பட்டனர்.

x