பழநி: மத்திய அரசை கண்டித்து பழநியில் சாலை மறியலில் ஈடுபட்ட இடதுசாரி கட்சியினர் 200 பேரை போலீஸார் கைது செய்தனர்.
மத்திய அரசு தாக்கல் செய்த 2024 - 25 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டிருப்பதாக கூறி, தமிழகம் முழுவதும் இன்று இடதுசாரி கட்சிகள் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றன. அதன்படி, திண்டுக்கல் மாவட்டம் பழநி தலைமை தபால் நிலையம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கட்சி உட்பட இடதுசாரி கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் செல்வராஜ் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் செல்வராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜமாணிக்கம் உட்பட இடதுசாரி கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இதில், பட்ஜெட்டில் தமிழகத்தை புறக்கணித்த மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர். தொடர்ந்து, புது தாராபுரம் சாலையில் மறியல் செய்ய முயன்ற 50 பெண்கள் உட்பட 200 பேரை போலீஸார் கைது செய்தனர்.