கோவை: அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து உயர்கல்வியில் சேரும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் தமிழ் புதல்வன் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின், கோவை அரசு கலைக்கல்லூரியில் வரும் ஆகஸ்ட் 9ம் தேதி தொடங்கி வைக்கிறார். இதற்காக அந்தக் கல்லூரி உள்பட கோவையில் உள்ள கல்வி நிறுவனங்களில் மாணவர்களுக்கு வங்கிக் கணக்கு தொடங்கும் முகாம் இன்று நடைபெற்று வருகிறது.
“உயர் கல்வியில் பெண்கள் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கில் அறிமுகம் செய்யப்பட்ட ‘மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் புதுமைப்பெண் திட்டம்’ போல, அரசுப் பள்ளி மாணவர்களின் உயர் கல்வி சேர்க்கையை அதிகரிக்க ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டம் அறிமுகம் செய்யப்படும். இவர்களது வங்கிக் கணக்கில் மாதம்தோறும் ரூ.1,000 செலுத்தப்படும்” என இந்த ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, இந்த நிதியாண்டு முதல் அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை படித்த மாணவர்கள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு தமிழ்ப் புதல்வன் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாணவர்களுக்கு வழிகாட்டி நெறிமுறைகளின் அடிப்படையில் மாதம் ரூ.1,000 உதவித் தொகை வழங்க உத்தரவிட்டுள்ளது. இதில் கலை அறிவியல், பொறியியல், சட்டப்படிப்பு, துணை மருத்துவப் படிப்புகள், தொழில்சார் படிப்புகள், பட்டயப் படிப்பு, சட்டப்படிப்பு, ஒருங்கிணைந்த பட்ட மேற்படிப்பு ஆகியவையும் அடங்கும்.
இந்நிலையில் தமிழ் புதல்வன் திட்டம் கோவையில் வரும் ஆகஸ்ட் 9ம் தேதி அரசு கலைக் கல்லூரியில் தொடங்கி வைக்கப்பட உள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மாணவர்களுக்கான டெபிட் கார்டுகளை வழங்கி, தமிழ் புதல்வன் திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார். முதல்வர் வருகையை முன்னிட்டு கோவை அரசு கலைக் கல்லூரியில் வருவாய்த்துறையினர் சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டு, விழா ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். மேலும், கோவை அரசு கலைக் கல்லூரியில் வங்கிக் கணக்கு இல்லாத மாணவர்களுக்கான சிறப்பு முகாம் இன்று நடைபெற்று வருகிறது. இதில், வங்கிக் கணக்கு இல்லாத மாணவர்களுக்கு புதிதாக வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டு வருகிறது. இப்பணியை முதல்வர் எழிலி, பேராசிரியர் கனகராஜ் உள்ளிட்டோர் இன்று பார்வையிட்டனர்.
இதுதொடர்பாக, கோவை மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநர் கலைச்செல்வி கூறும்போது, "தமிழ் புதல்வன் திட்டத்தில் கோவை மாவட்டத்தில் உள்ள கலைக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள், நர்சிங் மற்றும் பார்மசி கல்லூரிகள், பாலிடெக்னிக், ஐடிஐ-க்கள், சட்டக்கல்லூரி உட்பட 412 கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் உதவித்தொகை பெற தகுதி உடையவர்கள் ஆவர். இதில் சில மாணவர்களிடம் வங்கிக் கணக்கு பராமரிக்கப்படவில்லை. அந்த மாணவர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு 'ஜீரோ பேலன்ஸில்' வங்கிக் கணக்கு தொடங்க அனைத்து கல்லூரிகளிலும் வங்கிகள் சார்பில் முகாம் நடத்தப்பட்டு வருகிறது." என்றார்.