அரியலூர் | மத்திய அரசை கண்டித்து மறியலில் ஈடுபட்ட கம்யூனிஸ்டுகள் 51 பேர் கைது 


அரியலூர்: மத்திய அரசு பட்ஜெட்டில் தமிழகத்துக்கு எந்த திட்டங்களுக்கும் நிதி ஒதுக்காததை கண்டித்து, அரியலூரில் மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்று (ஆக.01) சாலை மறியலில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரியலூர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த மறியல் போராட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ராமநாதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் இளங்கோவன் ஆகியோர் தலைமை வகித்தனர்.

போராட்டத்தில் மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பியவாறு சாலையில் அமர்ந்து மறியலில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அரியலூர் போலீஸார் மறியலில் ஈடுபட்ட 14 பெண்கள் உட்பட 51 பேரை கைது செய்தனர். தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் அனைவரையும் தங்கவைத்தனர்.

x