அதிமுக பொதுச்செயலாளரின் முன் நிற்கும் ஆகப்பெரும் சவால்கள்!


எடப்பாடி பழனிசாமி

பெரும் போராட்டத்துக்குப் பிறகு அதிமுக பொதுச்செயலாளர் பொறுப்பை ஏற்றிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. பெரும் போராட்டம் என்பது வெறும் வார்த்தைகள் இல்லை... அது ஒரு கஷ்டமான வரலாறு. வலிமையான அதிமுக என்ற இயக்கம் ஜெயலலிதா என்ற ஆளுமை மறைந்த பிறகு பல்வேறு காரணங்களால் சூறாவளிக்குள் சிக்கிக் கொண்டது. அதையெல்லாம் எதிர்கொண்டு சமாளித்து அதிமுகவை பழைய அதிமுகவாக மீட்டிருக்கும் வரலாறு அது.

சசிகலா சிறை சென்ற காரணத்தால் ஈபிஎஸ் முதல்வரானார். இன்னொரு பக்கம் சசிகலாவை எதிர்த்து தர்மயுத்தம் நடத்திய ஓபிஎஸ் சமரசம் செய்துகொண்டு மீண்டும் கட்சிக்குள் வந்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஆனார். இதனையடுத்து, சசிகலா, தினகரன் உள்ளிட்டவர்களை தந்திரமாக அதிமுகவை விட்டு நீக்கியது ஈபிஎஸ் - ஓபிஎஸ் கூட்டணி.

அப்படியும் பிரச்சினை ஓயவில்லை. அதிமுக அதிகாரத்தை தனக்காக மட்டுமே வைத்துக்கொள்ள நினைத்த ஈபிஎஸ் ஒற்றைத் தலைமை விவகாரத்தைக் கிளப்பினார். இதையே சாக்காக வைத்து பொதுக்குழுவைக் கூட்டி தன்னை இடைக்கால பொதுச் செயலாளராக அங்கீகரித்துக் கொண்ட ஈபிஎஸ், இன்னொரு பக்கம், ஓபிஎஸ் வகையறாக்களை கட்சியிலிருந்து கட்டம் கட்டினார். இதையடுத்து ஓபிஎஸ் தரப்பில் மேற்கொள்ளப்பட்ட சட்ட நடவடிக்கைகள் அனைத்துமே அவருக்கு பலன் தராத நிலையில், இடைக்கால பொதுச்செயலாளர் ஈபிஎஸ், நிரந்தரப் பொதுச்செயலாளர் ஆகிவிட்டார்.

இத்தனை நெடிய போராட்டத்தைக் கடந்து பொதுச்செயலாளர் பதவிக்கு வந்திருக்கும் ஈபிஎஸ், அதிமுகவை பழைய வலுவோடு , வளர்த்தெடுப்பாரா... அவருக்கு எதிரே நிற்கும் சவால்கள் என்னென்ன... என்பதெல்லாம் பலராலும் விவாதிக்கப்படுகிறது.

இந்த எதிர்பார்ப்புக்கு ஏற்ற வகையில், பொதுச்செயலாளராக பொறுப்பேற்றதுமே சடசடவென்று கட்சியை பலப்படுத்தும் வேலைகளையும் துவக்கியிருக்கிறார் ஈபிஎஸ். அதுதான் அதிமுகவுக்கு தற்போதைக்கான தேவையும்கூட.

ஏனெனில் கடந்த சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப்பிறகு கட்சியை யாரும் கவனிக்கவே இல்லை. ஒற்றைத்தலைமை விவகாரம் பாடாய்ப் படுத்திய நிலையில் அதைச் சமாளிக்கவே இருதரப்பும் தங்கள் பலத்தை பயன்படுத்தியதால் கட்சியின் உள்கட்டமைப்பு கலகலத்துப் போனது. தற்போது கழகத்தில் கலகங்கள் முடிவுக்கு வந்துவிட்டதால் கட்சி கட்டமைப்பில் கவனத்தை திருப்பியிருக்கிறார் எடப்பாடி.

பொதுச்செயலாளர் பதவியேற்றதும் ஈபிஎஸ் செய்த முதல் காரியம் கட்சிக்கு புதிய உறுப்பினர் சேர்க்கை தொடர்பான அறிக்கையில் கையெழுத்துப் போட்டதுதான். கட்சியின் பலமே அடிமட்டத் தொண்டர்கள்தான் என்பதால் ஜெயலலிதா அவ்வப்போது புதிய உறுப்பினர்களை சேர்த்தும், பழைய உறுப்பினர்களை புதுப்பிக்கச்சொல்லியும் கட்சியை உயிர்ப்போடு வைத்திருப்பார். அதே பாணியை தற்போது கையில் எடுத்துள்ளார் ஈபிஎஸ்.

அதிமுக சட்ட விதி 30-ன் படி கட்சியின் அமைப்புகளுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தலை நடத்த வேண்டும். ஒவ்வொரு அமைப்பின் தேர்தல் நடக்கும் முன்பும், உறுப்பினர்களின் பதிவை புதுப்பித்தல், புதிய உறுப்பினர்கள் சேர்த்தல் ஆகிய பணிகளை முடிக்க வேண்டும். எனவே, அதிமுக உறுப்பினர்களின் பதிவு புதிப்பித்தல், புதிய உறுப்பினர்களை சேர்த்தல் ஆகிய பணிகள் நடக்க உள்ளன. இதன்மூலம் தனது பலத்தை அதிகரிப்பதோடு கட்சியில் தனது செல்வாக்கை பெருக்கவும் திட்டமிட்டுள்ளார் ஈபிஎஸ்.

அடுத்ததாக, சசிகலா, தினகரன், ஓபிஎஸ் உள்ளிட்ட ஒரு சிலரைத் தவிர பிரிந்து சென்ற மற்ற அனைவரையும் மீண்டும் கட்சிக்குள் கொண்டுவர வேண்டும் என்பதும் அவருடைய நோக்கமாக இருக்கிறது. தனக்கு வாழ்த்துச் சொல்ல கையில் பூங்கொத்துடன் வந்த அதிமுக மூத்த நிர்வாகிகளிடம் பேசிய ஈபிஎஸ், “அதிமுகவில் இருந்து பிரிந்துசென்றவர்களை மீண்டும் நம் பக்கம் வரவழைக்க எல்லா ஏற்பாடுகளையும் செய்யுங்கள். நமது அடுத்த பணி அதுவாகத்தான் இருக்கவேண்டும். மக்களவைத் தேர்தலில் கட்சியை மீண்டும் வலுவான இயக்கமாக மாற்ற இப்போதே ஒன்றுசேர வேண்டும். திமுகவே மிரளும் அளவுக்கு நமது அடுத்தகட்ட பணிகள் இருக்க வேண்டும்” என்று அறிவுறுத்தினாராம்.

மேலும், கட்சியினருக்கு பக்க பலமாகவும், பாதுகாப்பாகவும் இருப்பேன் என்பதையும் அவர் உணர்த்தியிருக்கிறார். ‘’நாம் நினைத்தால் எதுவும் முடியும். தொண்டர்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் நமது செயல்பாடுகள் அமைய வேண்டும். என்ன பிரச்சினை இருந்தாலும் என்னிடம் வந்து தெரிவியுங்கள். உங்களுக்கு உதவ நான் தயாராக உள்ளேன். இந்த இயக்கத்துக்கு புத்துணர்ச்சியூட்டும் வகையில் உங்கள் செயல்பாடுகள் அமைய வேண்டும்’’ என்று அவர் நம்பிக்கையாகப் பேசியிருப்பது கட்சியின் மூத்த நிர்வாகிகளையும் உற்சாகப்படுத்தியுள்ளது.

கட்சியைப் பலப்படுத்தவும், நிலைப்படுத்தவும் திமுக எதிர்ப்பை தீவிரப்படுத்தவும் ஈபிஎஸ் திட்டமிட்டுள்ளார். அதனால் தான் இப்போது மாநிலத்தின் முக்கிய பிரச்சினைகளில் அண்ணாமலைக்கு முன்பாகவே ஈபிஎஸ்ஸின் அறிக்கைகள் தூள் பறக்கின்றன. மார்ச் 29-ம் தேதி மாலை விழுப்புரத்தில் நடந்த கொலைச் சம்பவத்தைக் கண்டித்து அடுத்த நாளே பேரவையில் கவன ஈர்ப்புத் தீர்மானத்தைக் கொண்டுவந்தார் ஈபிஎஸ்.

இப்படி ஈபிஎஸ் அடித்து ஆடத்தொடங்கியிருந்தாலும் அவருக்கு முன் நிற்கும் சவால்களும் அதிகம்தான். பொதுச்செயலாளர் பதவி நிலையானதா என்ற கேள்வியும் விடைதெரியாமல் தான் நிற்கிறது. திருத்தப்பட்ட தேர்தல் விதிகளின் கீழ் தேர்தல் நடந்தது என்று தேர்தல் ஆணையத்துக்கு ஈபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், திருத்தப்பட்ட விதிகளுக்கு தேர்தல் ஆணையம் இதுவரை ஒப்புதல் தரவில்லை. அப்படி ஒப்புதல் தராத தேர்தல் ஆணையம் இந்த பொதுச்செயலாளர் தேர்வுக்கும் நிச்சயம் ஒப்புதல் தராது என்பது ஒரு சிலரின் வாதமாக இருக்கிறது. சென்னை உயர் நீதிமன்றத்தில் இருக்கும் ஓபிஎஸ் தரப்பின் பொதுக்குழு வழக்கின் மேல் முறையீட்டு மனுவும் ஈபிஎஸ் தரப்புக்கு இன்னொரு சவால்தான்.

அடுத்ததாக, ஈபிஎஸ்ஸுக்கு இருக்கும் பெரிய குழப்பமும் சிக்கலும் பாஜகவுடனான கூட்டணிதான். கடந்த 4 வருடங்களாக தங்களை ஆக்டோபஸ் பிடியில் வைத்திருக்கும் பாஜகவிடமிருந்து அவர் முற்று முழுதாக விட்டு விலகிவர வேண்டும் என்பதுதான் அதிமுகவினரின் விருப்பமாக இருக்கிறது. ஆனால், திமுகவை சமாளிக்க பாஜகவின் தயவு இன்னும் கொஞ்ச நாளைக்கு தேவை என்பதால் இந்த விஷயத்தில் நிதானம் காக்கிறார் ஈபிஎஸ். அதனால் தான் பாஜக கூட்டணி குறித்த கேள்விகளுக்கு, “கூட்டணி இல்லை என்று நானா சொன்னேன்?” என்று மையமாகப் பதில் சொல்கிறார்.

மக்களவைத் தேர்தல் முடிவுகள் எப்படி வந்தாலும் பரவாயில்லை. ஆனால், பாஜக கூட்டணியில் இருந்து விலகிவிட வேண்டும் என்பது தான் ஈபிஎஸ்ஸின் உள் விருப்பமும். இந்தத் தேர்தலில் கழற்றிவிட்டால்தான் சட்டமன்றத் தேர்தலில் சங்கடமில்லாமல் மக்களைச் சந்தித்து வாக்குக் கேட்க முடியும்; அப்போதுதான் அனைத்துத் தரப்பு மக்களும் அதிமுகவுக்கு வாக்களிப்பார்கள் என்பது அவரது கணக்கு.

ஆனால், அவரை அப்படி விட்டுவிட பாஜக மேலிடம் தயாராய் இல்லை. தமிழ்நாட்டில் அதிமுகவுடன் கூட்டணி தொடர்வதாக அண்ணாமலையின் ஆட்சேபத்தையும் மீறி அமித் ஷா அறிவித்திருப்பது அதன் வெளிப்பாடு தான். இப்படி தங்களை அட்டையாக ஒட்டிக்கொண்டு நிற்கும் பாஜகவை, அதன் தொடர் அழுத்தங்களை ஈபிஎஸ் இனி எப்படிச் சமாளிக்கப் போகிறார் என்பதும் கேள்விக்குறிதான்.

அடுத்ததாக, அவரது சொந்த கோட்டையான கொங்கு மண்டலத்தின் மீது திமுக தொடுக்கும் தொடர் தாக்குதல்களும் அவருக்கு பெரும் சவாலாய் நிற்கிறது. கொங்கு மண்டலத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் வேலையை ஆட்சிக்கு வந்தது முதலே திமுக மும்முரமாக செய்து வருகிறது. இதற்காகவே செந்தில் பாலாஜியை கோவையில் முகாம் போடவைத்திருக்கிறது திமுக. அவரும் கொடுத்த வேலையை குறைவின்றி செய்துகொண்டிருக்கிறார்.

கொங்கு மண்டல அதிமுக முக்கிய தலைகளை திமுகவுக்கு இருப்பதையும் பிரதானமாகச் செய்துகொண்டிருக்கிறார் செந்தில் பாலாஜி. மடங்காமல் நிற்கும் அதிமுகவினர் மீது வழக்குகள் பாய்கின்றன. இப்படி தனது கோட்டையின் மீது தொடுக்கப்படும் போரையும் எதிர்த்து நின்று முறியடித்து கட்சியை இழுத்து நிறுத்த வேண்டும் ஈபிஎஸ்.

தென் மாவட்டங்களில் அதிமுக வாக்குவங்கியை மீட்டெடுப்பதும் அவருக்கு இருக்கும் சிக்கலான பணி. தெற்கில் அதிமுக நிர்வாகிகள் ஈபிஎஸ் பக்கம் இருந்தாலும் முக்குலத்தோர் சமூகத்து வாக்காளர்கள் முழுமையாக இன்னும் ஈபிஎஸ் தலைமையை அங்கீகரிக்கவில்லை. தங்கள் சமூகத்தைச் சேர்ந்த ஓபிஎஸ், சசிகலா, தினகரன் உள்ளிட்டோரை கவுண்டரான ஈபிஎஸ் திட்டமிட்டு ஓரங்கட்டிவிட்டதாக அந்த மக்களுக்கு வருத்தம் இருக்கிறது. எம்ஜிஆர் காலத்திலிருந்தே அதிமுகவுக்கு பெருவாரியாக வாக்களித்து பழகிவிட்ட அந்த மக்களை மீண்டும் தன் பக்கம் திருப்ப வேண்டிய பெரும் பணியும் ஈபிஎஸ்ஸுக்கு இருக்கிறது.

இந்த விஷயத்தில் அண்ணாமலையும் ஈபிஎஸ்ஸுக்கு சவாலாய் நிற்கிறார். சசிகலா, தினகரன், ஓபிஎஸ் ஆகியோரை தங்கள் பக்கம் சேர்த்துக் கொள்வதுடன் மட்டுமல்லாமல் தென் மாவட்டங்களில் ஓரளவுக்கு செல்வாக்கோடு இருக்கும் தேவரின தலைவர்களை தங்கள் கட்சிக்குள்ளோ, அணிக்குள்ளோ கொண்டுவரும் பணிகளை அண்ணாமலை தீவிரப்படுத்தி வருகிறார்.

அதிமுக பொதுச்செயலாளர் ஈபிஎஸ்ஸுக்கு எதிராக நிற்கும் இந்த சவால்கள் குறித்து முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமாரிடம் பேசினோம். ”தொடர்ந்து கட்சியை பலப்படுத்தும் வேலைகள் நடந்து கொண்டுதான் உள்ளது. கட்சியை அமைப்பு ரீதியாக வலுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மக்களைச் சந்திக்கவும் தொண்டர்களைச் சந்திக்கவும் திட்டம் உள்ளது.

அதேபோல, திமுக அரசின் மக்கள் விரோத செயல்களை எதிர்த்து போராட்டங்கள் நடத்துவது, அவர்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இருப்பதை மக்களிடம் கொண்டு சேர்ப்பது, சட்டம் - ஒழுங்கு சீர்கேடு குறித்து மக்களிடம் எடுத்துச் சொல்வது என அதிமுக முழுவீச்சில் இறங்கி செயல்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் அதிமுக தான் பிரதான எதிர்க்கட்சி, பெரிய கட்சி என்பதை நிரூபிக்கும் வகையில் எங்களுடைய செயல்பாடுகள் இருக்கும். பொதுக்குழு, பொதுச்செயலாளர் ஆகிய விவகாரங்களில் சட்டரீதியான அடுத்தகட்ட நடவடிக்கைகளும் தொடர்கின்றன. கூட்டணி விஷயத்தில் தற்போது எந்த குழப்பமும் இல்லை. அதிமுக ஆதரவு வாக்குகள் ஒருபோதும் சிதறாது. அது அதிமுகவுத்தான் வந்து சேரும்” என்றார் அவர்.

ஓபிஎஸ் பிரச்சினையை சமாளித்ததையே பெரும் சாதனையாக நினைக்கிறார் ஈபிஎஸ். ஆனால், ஒரு கட்சியின் தலைவராக அவருக்கு அதையும் தாண்டிய பிரச்சினைகள் நிறையவே இருக்கின்றன. அத்தனையையும் தனது சாதுர்யத்தால் எப்படிச் சமாளிக்கிறார் என்று பார்க்கலாம்!

x