‘மத்திய பட்ஜெட் அதானி, அம்பானிகளுக்கானது’ - சென்னையில் மறியல் செய்ய முயன்ற கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கைது


படங்கள்: எஸ்.சத்தியசீலன்

சென்னை: மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதைக் கண்டித்து கிண்டியில் மறியல் செய்ய முயன்ற, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்பட நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.

மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டிருப்பதை கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கிண்டி பேருந்து நிலையம் அருகே மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி அக்கட்சியினர் இன்று காலை 10 மணியளவில் கிண்டி பேருந்து நிலையம் முன்பு திரண்டனர். அப்போது அவர்கள் கட்சி கொடியுடன் மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்தும், பிரதமர் மோடியை கண்டித்தும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை கண்டித்தும் வாசகங்கள் கொண்ட பதாகைகளை ஏந்தி வந்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மறியல் போராட்டத்தை தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''மத்திய அரசு பட்ஜெட் அதானி அம்பானிகளுக்கான பட்ஜெட்டாக உள்ளது. அதானி அம்பானிகளுக்கு வரிச் சலுகை அளித்துவிட்டு, ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் மீது வரிச் சுமையை அதிகப்படுத்தி உள்ளது. இதை கண்டித்து நாங்கள் மறியல் போராட்டம் நடத்த உள்ளோம். வயநாடு பேரிடர் நிவாரண பணிக்கு தமிழக முதல்வர் தமிழக அரசு சார்பில் ரூபாய் 5 கோடி கொடுத்திருப்பது வரவேற்கத்தக்கது. நாடாளுமன்றத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசியதை மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் விமர்சனம் செய்திருப்பது கண்டிக்கத்தக்கது'' என்றார்.

அதையடுத்து கிண்டி பேருந்து நிலையத்தில் இருந்து மறியல் செய்வதற்காக பிரதான சாலையை நோக்கி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கோஷமிட்டபடி சென்றனர். அவர்களை பிரதான சாலைக்கு செல்லவிடாமல் போலீசார் தடுப்புகளை ஏற்படுத்தியும் குறுக்கே நின்றும் தடுத்தனர். அதனால் அவர்கள் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். பின்னர் பிரதான சாலைக்கு செல்ல முயன்றபோது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்பட நூற்றுக்கணக்கானோரை போலீசார் கைது செய்து பேருந்துகளில் அழைத்துச் சென்றனர்.

x