கரூரில் பரபரப்பு: அனுமதியின்றி கூடிய கூட்டம் - முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உட்பட அதிமுகவினர் 450 பேர் மீது வழக்குப்பதிவு!


கரூர் லைட்ஹவுஸ் முனையில் உள்ள முன்னாள் முதல்வர் அண்ணா சிலைக்கு நேற்றிரவு அனுமதியின்றி திரண்டிருந்த அதிமுகவினர் மத்தியில் மாலை அணிவித்த முன்னாள் அதிமுக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உட்பட 40 பெண்கள் உள்ளிட்ட 450 அதிமுகவினர் மீது, பொதுமக்களுக்கு இடையூறு செய்ததாக கரூர் நகர போலீஸார் நேற்று வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நில மோசடி வழக்குகளில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் திருச்சி மத்திய சிறையில் இருந்து நேற்று விடுதலையானார். திருச்சி மத்திய சிறையில் அவரை ஆரவரமாக வரவேற்ற அதிமுக நிர்வாகிகள் மற்றும் கட்சியினர் அவருடன் கரூர் திரும்பினர். கரூர் லைட்ஹவுஸ் முனையில் உள்ள முன்னாள் முதல்வர்கள் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் சிலைகளுக்கு முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மாலை அணிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட அவைத்தலைவர் எஸ்.திருவிக, முன்னாள் நகரச்செயலாளர் வை.நெடுஞ்செழியன், மாவட்ட துணைத்தலைவர் அழகுதங்கராஜ், கரூர் மத்திய நகர மேற்கு தலைவர் சக்திவேல், புகழூர் நகரச்செயலாளர் விவேகானந்தன், கரூர் மத்திய மாநகர மேற்கு செயலாளரும், கரூர் மாநகராட்சி மாமன்ற உறுப்பினருமான தினேஷ், கரூர் மத்திய மாநகர செயலாளர் பழனிச்சாமி, எம்ஜிஆர் இளைஞரணி மாவட்டச் செயலாளரும், மாவட்ட ஊராட்சிக்குழு முன்னாள் துணைத்தலைவருமான தானேஷ், இலக்கிய அணி மாவட்டச் செயலாளர் என்.எஸ்.கிருஷ்ணன் மற்றும் 50 பெண்கள் உள்ளிட்ட அதிமுகவினர் 450 பேர் மீது முன் அனுமதியின்றி சட்டவிரோதமாக ஒன்றுக்கூடி, சிலைகளுக்கு மாலை அணிவித்து பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறு செய்ததாக கரூர் நகர போலீஸார் நேற்றிரவு வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

x