சென்னை: மாவட்ட வளர்ச்சிப்பணிகளைத் துரிதப்படுத்தவும், நலத்திட்ட உதவிகளைக் கண்காணிக்கவும் 11 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அலுவலர்களை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
மாவட்ட வளர்ச்சிப் பணிகளைத் துரிதப்படுத்தவும், பொதுமக்களுக்கு சென்றடைய வேண்டிய நலத்திட்ட உதவிகளை கண்காணிக்கவும் தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களுக்கு ஐஏஎஸ் அதிகாரிகளை கண்காணிப்பு அலுவலர்களாக தமிழக அரசு நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளது. இதன்படி திருப்பத்தூர், திண்டுக்கல், சென்னை, திருவண்ணாமலை, தூத்துக்குடி, கள்ளக்குறிச்சி, திருப்பூர், கோவை, புதுக்கோட்டை, நாமக்கல், நாகப்பட்டினம் போன்ற 11 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்திற்கு சி. விஜயராஜ்குமார், திண்டுக்கல் மாவட்டத்திற்கு பிரஜேந்திர நவிந்த், சென்னை மாவட்டத்திற்கு ஜெயஸ்ரீ முரளிதரன், திருவண்ணாமலை மாவட்டத்திற்கு மதுமதி, தூத்துக்குடி மாவட்டத்திற்கு வீரராகவ ராவ், கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு தர்மேந்திர பரிதமாப், திருப்பூர் மாவட்டத்திற்கு வள்ளலார், கோவை மாவட்டத்திற்கு நந்தகுமார், புதுக்கோட்டை மாவட்டத்திற்கு சுந்தரவள்ளி, நாமக்கல் மாவட்டத்திற்கு அசியா மரியம், நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு மகேஸ்வரன் ஆகியோர் கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இயற்கைப் பேரிடர் காலங்களில் மாவட்ட ஆட்சியர்களுடன் ஒருங்கிணைந்து பணியாற்றி, அந்த மாவட்டத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர்களுக்கு அரசு அறிவுத்தியுள்ளது.