மதுரை: மதுரையில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக ஒற்றைக்கல் யானைமலையில் மழை வெள்ளம் அருவி போல் கொட்டியதால் மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
மதுரை ஒத்தக்கடையில் உள்ளது யானைமலை. மதுரையின் முக்கிய அடையாளங்களில் ஒன்று இது. சுமார் 4 கிலோ மீட்டர் நீளம், 1200 மீட்டர் அகலம், 400 மீட்டர் உயரம் கொண்டது ஒரே கல்லிலான மலை இது. பார்க்கும் போது யானை படுத்திருப்பது போல் காணப்படுவதால் யானைமலை என்கின்றனர். மலையின் அடிவாரத்தில் 25க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
மலையில் குடைவரை கோயில்களான யோகநரசிங்க பெருமாள் கோயில், லாடன் கோயில், சமணர் படுகைகள், சமண சமய தீர்த்தங்கரர்களின் சிற்பங்கள், தமிழ் பிரமி கல்வெட்டு ஆகிய நினைவுச் சின்னங்களும் உள்ளன. இவற்றை தொல்லியல் துறை பாதுகாத்து வருகிறது.
மதுரையில் கத்ரி வெயில் கொளுத்தி வந்த நிலையில், கடந்த நான்கு நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று மதுரையில் மழை பெய்த போது யானைமலை தெரியாத அளவுக்கு மேக மூட்டம் காணப்பட்டது. கன மழை காரணமாக மலை உச்சியில் இருந்து ஒரு சில இடங்களில் நீர் வழிந்தது.
இந்நிலையில் இன்று காலையில் திடீரென யானைமலை உச்சியிலிருந்து அருவி போல் மழை வெள்ளம் கொட்டியது. நரசிங்கம் கோயிலின் இடது புறத்தில் லாடன் கோயில் பகுதியில் யானைமலை உச்சியிலிருந்து அருவி போல் பாய்ந்த வெள்ளத்தை பார்த்து மலையை சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் மக்கள் அதிர்ச்சியடைந்தனர். உள்ளூர் மக்கள் திடீர் அருவியில் குளித்து மகிழ்ந்தனர். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலை தளங்களில் வெளியானதால், பல்வேறு இடங்களிலிருந்து மக்கள் யானைமலைக்கு படையெடுத்தனர்.