பேரவை தலைவர் அப்பாவுக்கு எதிரான அவதூறு வழக்கு: சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றம்


சென்னை: சட்டப் பேரவைத் தலைவர் அப்பாவுக்கு எதிராக அதிமுக வழக்கறிஞர் பிரிவு நிர்வாகி தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணையை, எம்பி, எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் கடந்தாண்டு நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, 40 அதிமுக எம்எல்ஏ-க்கள் திமுகவில் இணைய தயாராக இருந்ததாகவும், ஆனால் அதை ஏற்க திமுக தலைவர் ஸ்டாலின் மறுத்துவிட்டதாகவும் கருத்து தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இதன் மூலம் அதிமுகவின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அவதூறு பரப்பியுள்ளதாகக் கூறி சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவுக்கு எதிராகஅதிமுக வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளரான ஆர்.எம். பாபு முருகவேல்,சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு கோப்புக்கு எடுக்கப்படாததையடுத்து மனுதாரரான பாபு முருகவேல் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், பாபு முருகவேலின் வழக்கை கோப்புக்குஎடுத்து சட்டப்படியான நடவடிக்கையை மேற்கொள்ள சென்னை முதன்மை அமர்வுநீதிமன்றத்துக்கு உத்தரவிட்டிருந்தது.

அதன்படி இந்த வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.அல்லி முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரரான பாபுமுருகவேல் நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். அதையடுத்து சட்டப்பேரவைத் தலைவருக்கு எதிரான இந்த வழக்கு விசாரணையை எம்பி, எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றிய நீதிபதி, விசாரணையை வரும் ஆக.7-க்கு தள்ளி வைத்துள்ளார்.

x