சென்னையில் ஆசிரியர்கள் போராட்டம் | மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசித்து அடுத்த நடவடிக்கை: டிட்டோஜாக் முடிவு


பதவி உயர்வு பாதிப்பை ஏற்படுத்தும் அரசாணை 243-ஐ ரத்து செய்வது உள்ளிட்ட 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (டிட்டோஜாக்) சார்பில் டிபிஐ வளாகத்தை முற்றுகையிடும் போராட்டம் 3-வது நாளாக நேற்று நடைபெற்றது. போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்கைள போலீஸார் கைது செய்தனர். | படம்: எஸ்.சத்தியசீலன்|

சென்னை: இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு ஒரு மாத காலம் அவகாசம் கேட்டிருப்பதால், அடுத்த கட்டநடவடிக்கை குறித்து மாவட்ட நிவாகிகளுடன் ஆலோசித்து முடிவு செய்யப்படும் என டிட்டோஜாக் தெரிவித்துள்ளது.

31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (டிட்டோஜாக்) சார்பில் 3 நாட்கள் டிபிஐவளாகத்தை (பேராசிரியர் அன்பழகன் வளாகம்) முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இதைத்தொடர்ந்து, கடந்த ஜூலை 29-ம் தேதி முதல் 3 நாட்களுக்கு சென்னையில் தொடக்கக் கல்வி இயக்குநர் அலுவலகம் அமைந்துள்ள டிபிஐ வளாகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்தனர். அதன்படி, முதல் 2 நாட்களில் மட்டும் 2,600-க்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டு பின்னர் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில், தொடர்ந்து 3-வதுநாளாக நேற்றும் டிட்டோஜாக் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் தலைமையில் இடைநிலை ஆசிரியர்கள் நேற்றும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், முன்னேற்பாடுகளுடன் தயாராக இருந்த காவல் துறையினர் டிபிஐ வளாகத்தின் முதன்மை நுழைவு வாயிலேயே ஆசிரியர்களையும் சங்க நிர்வாகிகளையும் தடுத்து கைது செய்தனர். கடைசி நாள் போராட்டத்தில் 500 பெண்கள் உட்பட 1,700 பேர் கைது செய்யப்பட்டனர்.

பதவி உயர்வுக்கு பாதிப்பைஏற்படுத்தக்கூடிய பள்ளிக்கல்வித்துறை அரசாணை எண் 243-ஐ ரத்து செய்ய வேண்டும் என்பதுதான் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடைநிலை ஆசிரியர்களின் பிரதான கோரிக்கையாக இருந்து வருகிறது.இந்த அரசாணையால் சுமார் ஒருலட்சம் ஆசிரியர்கள் பாதிக்கப்படுவதாகவும், அவர்களில் பெரும்பாலானோர் ஆசிரியைகள் என்று டிட்டோஜாக் நிர்வாகிகள் கூறினர்.

இதற்கிடையே, இடைநிலை ஆசிரியர்களின் நிதி சாராத சில கோரிக்கைகளை நிறைவேற்ற தொடக்கக் கல்வித்துறை முன்வந்திருப்பதாக கூறப்படுகிறது. எனினும் அதற்கு ஒரு மாத கால அவகாசம் கேட்டிருப்பதாக உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். மறுபுறம்அடுத்தகட்ட நடவடிக்கை குறித்துடிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள தமிழக ஆசிரியர் கூட்டணி மாநிலஅலுவலகத்தில் நேற்று இரவு ஆலோசனை செய்தனர்.

இதில், அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக மாநிலம் முழுவதும் உள்ள மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும். இதற்கான கலந்துரையாடல் கூட்டம் திருச்சியில் விரைவில் நடத்தப்பட உள்ளது என்று டிட்டோஜாக் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

x