நில மோசடி புகார்: எம்.ஆர்.விஜயபாஸ்கர் நிபந்தனை ஜாமீனில் விடுவிப்பு; ஒரு குழுவே சதி செய்ததாக குற்றச்சாட்டு


கரூர் / திருச்சி: கரூரில் 22 ஏக்கர் நிலத்தை மோசடிசெய்ததாக எழுந்த புகார் தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரதுஆதரவாளர் பிரவீன், உடந்தையாக இருந்ததாக வில்லிவாக்கம் காவல் ஆய்வாளர் பிருத்விராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும், சம்பந்தப்பட்ட நிலத்தை மிரட்டி வாங்கியதாக, நில உரிமையாளர் பிரகாஷ் என்பவர் வாங்கல் போலீஸில் அளித்த புகாரிலும், விஜயபாஸ்கர், பிரவீன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், இந்த வழக்குகளில் ஜாமீன் கோரி விஜயபாஸ்கர், பிரவீன், பிருத்விராஜ் ஆகியோர் கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 1-ல் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி பரத்குமார், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், பிரவீன் ஆகியோர் கரூர்சிபிசிஐடி அலுவலகத்தில் காலை,மாலை என இருவேளையும்,வாங்கல் காவல் நிலையத்தில் ஒருமுறையும் ஆஜராகி கையெழுத்திட வேண்டுமென்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி நேற்றுமுன்தினம் இரவு உத்தரவிட்டார். இதேபோல, பிருத்விராஜும் சிபிசிஐடி அலுவலகத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டுமென்ற நிபந்தனையின்பேரில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இதையடுத்து, திருச்சி மத்தியசிறையில் இருந்து எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேற்று மாலை விடுவிக்கப்பட்டார். அவருக்கு அதிமுகவினர் வரவேற்பு அளித்தனர். பின்னர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கடந்த 3 ஆண்டுகளில் என் மீது31 வழக்குகளைப் பதிவு செய்துள்ளனர். இவை அனைத்தும் அரசியல் சார்ந்த வழக்குகள் ஆகும். தற்போது நில மோசடி வழக்கில் எனக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. இந்த வழக்கை சட்டப்படி எதிர்கொண்டு, குற்றச்சாட்டிலிருந்து விடுபடுவேன். என்னைசிறையில் அடைக்க கடந்த 2 மாதங்களாக ஒரு பெரிய குழுவே சதி செய்துள்ளது. யார் உத்தரவின் பேரில் இந்த வழக்கை பதிவு செய்து இருப்பார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்

x