ஜிப்மர் மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் குழந்தை உயிரிழப்பா? - உறவினர்கள் குற்றச்சாட்டு


பிரதிநிதித்துவப் படம்

புதுச்சேரி: ஜிப்மரில் தவறான சிகிச்சையால் குழந்தை உயிரிழந்ததாக கூறி ,உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுவை அரியாங்குப்பம் மணவெளி ஓடைவெளியைச் சேர்ந்தவர் கலையரசன் (31). ரெஸ்டாரன்ட் நடத்தி வருகிறார். இவரது மனைவி ஜெயசுதா (27). கடந்தாண்டு இவர்களுக்கு திருமணம் நடந்தது. கருவுற்ற ஜெயசுதாவை கடந்த சில மாதங்களாக அவரது குடும்பத்தினர், அரியாங்குப்பத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று வந்தனர். கலையரசன் சில ஆண்டுகளுக்கு முன்னர் ஜிப்மரில் வேலை பார்த்துள்ளார். அதனால், அங்கு தனது மனைவிக்கு பிரசவம் நடந்ததால், நன்றாக பார்த்துக்கொள்வார்கள் என எண்ணியுள்ளார்.

பிரசவத்துக்கு 10 நாட்கள் இருந்த நிலையில், மே 13-ம் தேதி திடீரென ஜெயசுதாவுக்கு வலி ஏற்பட்டது. உடனே கலையரசன் ஜிப்மர் மருத்துவ மனைக்கு மனைவியை அழைத்துச் சென்றார். பிரசவ தேதி நெருங்கியதால் மருத்துவர்களும் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அப்போது மருத்துவர்கள் ஸ்கேன் பார்த்த போது குழந்தை நன்றாக இருப்பதாக கூறியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் மதியம் பணியில் இருந்த மருத்துவர்கள் ஜெய சுதாவுக்கு ஆக்ஸிஜன் கொடுத்துள்ளனர்.

தான் நன்றாக இருக்கும் போது எதற்கு இப்படி செய்கிறார்கள் என புரியாமல் ஜெய சுதா இதை குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார். சிறிது நேரத்தில் ஜெய சுதாவுக்கு ஸ்கேன் செய்து பார்த்தபோது, வயி்ற்றில் உள்ள குழந்தை இறந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். குழந்தையை உடனே வெளியில் எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் ஆபத்து என்று கூறி, ஜெயசுதாவுக்கு பிரசவ வலிஏற்படுத்தும் ஊசியை போட்டுள்ளனர். ஜெயசுதாவுக்கு நேற்று அதிகாலை இறந்த நிலையில பெண் சிசு வெளியில் வந்துள்ளது.

மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் குழந்தை இறந்ததாகக் கூறி உறவினர்கள் போராட்டம் நடத்தினர். ஜிப்மர் நிர்வாகம், உறவினர்களிடம் நேற்று பேச்சுவார்த்தை நடத்தி, முறையான விசாரணை நடத்தப்படும் என தெரிவித்துள்ளது. ஆனாலும் குழந்தையின் உடலை வாங்க மறுத்து, உறவினர்கள் மருத்துவமனை வளாகத்திலேயே காத்திருந்தனர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

x